பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த 2 பேர் மீது குற்றப்பத்திரிகை
பெங்களூரு : ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில், ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய இருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கர்நாடகாவின் ஷிவமொகாவை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை, ஒரு கும்பல் மூளைச்சலவை செய்து, சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்த்துவிட்டது, 2022ல் தெரிந்தது.இதுகுறித்து என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று, அப்துல் மதின் அகமது தஹா, முஜாவிர் ஹுசைன் சாகிப் என்ற இருவர் மீது, பெங்களூரு என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.குற்றப்பத்திரிகையில் தீ வைப்பு, குண்டுவெடிப்பு, தேசிய கொடியை எரித்தது, மூளைச்சலவை செய்து இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் சேர்த்தது, பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியது உட்பட பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன.இவர்கள் இருவருக்கும், பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஹோட்டல் குண்டுவெடிப்பிலும் தொடர்பு உள்ளது. இந்த வழக்கிலும், இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.