புதுடில்லி: தமிழகம் மற்றும் கர்நாடகாவில் டிஜிட்டல் மோசடியில் ஈடுபட்ட எட்டு பேர் கும்பல் மீது, அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆன்லைன், மொபைல் போன் வாயிலாக அழைத்து, உங்கள் மீது வழக்கு, புகார் உள்ளது என்று கூறி, டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி, பணம் பறிக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, நீதிபதி என்று கூறி, இந்த கும்பல் பெரும் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. பணம் கிடைக்கும் வரை, மொபைல் போன், வீடியோ அழைப்பிலேயே காத்திருக்க வைத்து துன்புறுத்தலும் நடக்கிறது.இந்த மோசடி கும்பலிடம் சிக்கி, பலரும் தங்களுடைய பணத்தை இழந்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில், 'மன் கீ பாத்' எனப்படும் ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, இந்த விஷயத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதாக, விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.விசாரணை அமைப்புகளின் விசாரணையின்போது, 'பேஸ்புக், வாட்ஸாப், டெலிகிராம்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாகவே, இந்த மோசடி கும்பல் பெரும்பாலும் இயங்கி வருவது தெரியவந்துள்ளது.இந்நிலையில், அமலாக்கத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:பங்குச் சந்தையில் அதிக லாபத்தை ஈட்டித் தருவதாக கூறி, முதலீடு செய்யும்படி மக்களை ஒரு கும்பல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது. பிரபல நிதி நிறுவனத்தின் பெயரைப் போலவே இருக்கும் போலியான நிறுவனத்தை துவக்கி, போலி மொபைல் போன் செயலி வாயிலாக இந்த கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரில், போலி முகவரியில், போலி நிறுவனத்தின் பெயரில், இந்த மோசடிகாரர்கள் செயல்பட்டு வந்தனர். இவர்கள், தமிழகம் மற்றும் கர்நாடகாவில், பலரிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில், 159 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடக போலீசார் பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. இவர்கள் மீது நீதிமன்றத்தில் சமீபத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய எச்சரிக்கை
'சைபர்' பாதுகாப்புக்கான, மத்திய அரசு அமைப்பான, ஐ4சி எனப்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம், புதிய எச்சரிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:டிஜிட்டல் கைது தொடர்பாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். போலீஸ், சி.பி.ஐ., உட்பட எந்த விசாரணை அமைப்பும், மொபைல் போன் வாயிலாக செயல்படாது. அவ்வாறு மொபைல் போனில் அழைப்பு வந்தால், அது மோசடியாளர்களின் கைவரிசையாகவே இருக்கும். இதுபோன்று மோசடி நடப்பதாக சந்தேகம் எழுந்தால், 1930 என்ற தேசிய சைபர் குற்ற அமைப்பின் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.