உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் கமிஷனர்கள் நியமன வழக்கு தலைமை நீதிபதி விலகல்

தேர்தல் கமிஷனர்கள் நியமன வழக்கு தலைமை நீதிபதி விலகல்

புதுடில்லி, மத்திய அரசின் பரிந்துரையின்படி, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை ஜனாதிபதி நியமிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதில், 'தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு தேர்வு செய்து, ஜனாதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும்' என, உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, தேர்தல் கமிஷனர்கள் தேர்வு சட்டத்தில், மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டது. அதன்படி, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் பிற தேர்தல் கமிஷனர்களை பரிந்துரைக்கும் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கியது. அவருக்கு பதிலாக, கேபினட் அந்தஸ்திலான அமைச்சர் அக்குழுவில் சேர்க்கப்பட்டார்.இதை எதிர்த்து, காங்., மூத்த தலைவர் ஜெயா தாக்கூர், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உட்பட ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த மனுவை தன்னால் விசாரிக்க முடியாது என்றும், வேறு அமர்வுக்கு மாற்றும்படியும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கேட்டுக் கொண்டார். இந்த வழக்கில் சஞ்சீவ் கன்னா ஏற்கனவே உத்தரவுகளை பிறப்பித்து இருப்பதால், அவர் விசாரிப்பதில் ஆட்சேபனை இல்லை என, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன், பிரசாந்த் பூஷண் தெரிவித்தனர்.அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, மனுவை, 2025 ஜன., 6க்கு பின், வேறு அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டார்.அதேநேரம், புதிய சட்டத்துக்கு இடைக்கால தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை