உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய ஜனாதிபதிக்கு சீன அதிபர் ரகசிய கடிதம்; உறவு புத்துயிர் பெற இதுவே காரணம்

இந்திய ஜனாதிபதிக்கு சீன அதிபர் ரகசிய கடிதம்; உறவு புத்துயிர் பெற இதுவே காரணம்

பீஜிங்: சீன அதிபர் ஷீ ஜின்பிங், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எழுதிய ரகசிய கடிதத்தால், இந்தியா - சீனா உறவு மேம்பட்டதுடன், புத்துயிர் பெறவும் முக்கிய காரணமாக அமைந்ததாக, 'ப்ளும்பெர்க்' ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற, கடந்த ஜனவரி முதல் சீனா உடனான வர்த்தகப் போரை தீவிரப்படுத்தினார். இதையடுத்து, இந்தியா உடனான உறவை புதுப்பித்துக்கொள்ள சீனா விரும்பியது. இது தொடர்பாக, இந்தியாவின் மனநிலையை அறிய, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, சீன அதிபர் ஷீ ஜின்பிங் ரகசிய கடிதம் ஒன்றை எழுதினார். இக்கடிதம் ஜனாதிபதிக்கு எழுதப்பட்டு இருந்தாலும், அதில் இடம்பெற்ற செய்தி பிரதமர் மோடிக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. கடிதத்தில், சீனாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு அமெரிக்க ஒப்பந்தம் குறித்தும் சீனா கவலை கொள்வதாக, ஷீ ஜின்பிங் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்தியா மீதான வரி விதிப்பையும் டிரம்ப் கடுமையாக்கினார். இதுமட்டுமின்றி ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது நான் தான் என்றும் டிரம்ப் கூறி வந்தார். இந்தியாவையும், சீனாவையும் தண்டிக்கும் நோக்குடன் டிரம்பின் வரிக் கொள்கை உள்ளது. அது இந்தியா - சீனா இடையேயான உறவுகள் புதுப்பிக்கப்பட துாண்டுதலாக மாறியது. சீனப் பொருட்களுக்கு கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா வரிகளை இரட்டிப்பாக்கியதைத் தொடர்ந்து, அதன் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் எதிர்க்க, இணைந்து செயல்பட வருமாறு இந்தியாவுக்கு சீன வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்தது. இதையடுத்து, டிரம்பின் வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட இரு பெரும் நாடுகளும், கடந்த 2020ல் நடந்த எல்லை தாண்டிய மோதலை கடந்து, முன்னேறுவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்த ஒப்புக்கொண்டன. இதன் ஒருபகுதியாக, இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான போக்குவரத்து மீண்டும் துவங்க உள்ளன. இந்தியாவுக்கான யூரியா ஏற்றுமதி மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ளது. இந்தியாவும் பல ஆண்டுகளாக நிறுத்தி வைத்த சீன மக்களுக்கான சுற்றுலா விசாக்களை மீண்டும் வழங்க முன்வந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்த வார இறுதியில் சீனாவில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா செல்கிறார். ஏழு ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக அந்நாட்டுக்குச் செல்லும் மோடி, அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளார். கடந்தாண்டு ரஷ்யாவின் கசானில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் போது, இருநாட்டு தலைவர்களும் சந்தித்தனர். கடந்த ஜனவரி முதல் சீனா, ஈரான், ரஷ்யா மற்றும் இந்தியா மீது அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்கவில்லை என்பதை அவர்களுக்கு எடுத்துக்காட்ட, இந்த உச்சி மாநாட்டை ஒரு வாய்ப்பாக சீன அதிபர் ஜின்பிங் பயன்படுத்திக் கொள்வார் என, 'தி சைனா குளோபல் சவுத் ப்ராஜெக்ட்' தலைமை ஆசிரியர் எரிக் ஓலாண்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kanakala Subbudu
ஆக 30, 2025 16:39

சீனா நம்பத்தகுந்த தேசம் இல்லை. நாம் உஷாராக இல்லை என்றால் நம்மை விழுங்க காத்திருக்கும் தேசம். காலம் காலமாக நம்மை தொந்தரவு செய்து வந்த தேசம். பாகிஸ்தானை அடிமை படுத்தி விட்டது. ஸ்ரீலங்காவை அடிமை படுத்த முழு வீச்சில் முயற்சி செய்து வருகிறார்கள்.


Gnana Subramani
ஆக 30, 2025 10:30

சீனா அதிபரை நேரில் சந்திக்கும் போது, பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் கொடுக்க கூடாது என்று மோடி சொல்லுவாரா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை