உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2020ல் ஒன்றே ஒன்று; 2025ல் 22 இடம்; கூட்டணியால் உச்சம் பெற்ற சிராக் பஸ்வான்

2020ல் ஒன்றே ஒன்று; 2025ல் 22 இடம்; கூட்டணியால் உச்சம் பெற்ற சிராக் பஸ்வான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: கடந்த 2020ம் ஆண்டு பீஹார் சட்டசபை தேர்தலில் வெறும் ஒரு இடத்தை மட்டுமே வென்ற சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி, பாஜ மற்றும் நிதிஷ் உடன் அமைத்த கூட்டணியால் 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பீஹார் சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜவும், ஐக்கிய ஜனதா தளமும், கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களை விட கூடுதல் இடங்களை வென்றுள்ளன. ஆனால், இந்த இரு கட்சிகளை விட, கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சிக்கு அபரிவிதமான வளர்ச்சியை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன. ஓட்டுத் திருட்டு, ஓட்டு அதிகார யாத்திரை என்று பல்வேறு வழிகளில் பாஜ மற்றும் நிதிஷ் குமாருக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்திருந்த நிலையில், சிராக் பஸ்வான் கூட்டணியில் இணைந்தார்.லோக் ஜன்சக்திக்கு ஒதுக்கப்பட்ட மொத்தம் 29 தொகுதிகளில் 22 இடங்களில் அதன் வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இந்த கட்சி 2020ம் சட்டசபை தேர்தலில் 137 இடங்களில் தனித்து போட்டியிட்டது. நிதிஷ்குமாரை எதிர்த்து பிரசாரம் செய்து வந்த இந்தக் கட்சிக்கு ஒரு சீட் மட்டுமே கிடைத்தது. இப்படி அதளபாதாளத்தில் கிடந்த லோக் ஜன்சக்தி கட்சிக்கு யாராலும் கணிக்க முடியாத வெற்றி கிடைத்துள்ளது. 2024ம் ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலில் சிராக் பஸ்வான் வெற்றி பெற்று, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பிடித்திருந்தாலும், பீஹார் தேர்தலை பொறுத்தவரையில் அவரது கட்சி ஓரங்கட்டப்பட்டிருந்தது என்பதே உண்மை. ஆனால், தற்போது, தேஜ கூட்டணியில் பலமான செயல்பாடுகளைக் கொண்ட கட்சியாக உருவெடுத்துள்ளது. தொகுதி பங்கீட்டின் போது லோக் ஜன்சக்தி கட்சிக்கு 29 இடங்களை ஒதுக்கிய போது, தேஜ கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் அதனை நேரடியாக விமர்சித்தன. ஆனால், இன்றைய தேர்தல் முடிவுகளில் முக்கிய வெற்றியாளராக சிராக் பஸ்வான் பார்க்கப்படுகிறார். உட்கட்சி பூசல், சித்தப்பா பசுபதி நாத் பாராஸூடன் ஏற்பட்ட மோதல் உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் சிராக் பஸ்வான் மீண்டும் கட்சியை கட்டியெழுப்பி உள்ளார். நிதிஷூடன் கைகோர்ப்பு எப்படி?2020 சட்டசபை தேர்தல் முதல் நிதிஷ் குமாருடன் சிராக் பாஸ்வானுக்கு மோதல் போக்கு நிலவி வந்தது. இரு தரப்பினரையும் இணைக்க பாஜ பெரும் முயற்சி எடுத்தது. பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பேச்சு நடத்தி இரு தரப்பினருக்கும் சமாதானம் செய்தனர். இதன் காரணமாக, மனத்தாங்கல்களை விட்டு, கூட்டணியில் சிராக் பாஸ்வானை நிதிஷ் குமார் சேர்த்துக் கொண்டார். இப்படி சேர்ந்ததற்கு இப்போது பலன் கிடைத்துள்ளது என்று அரசியல் கட்சியினர் பலரும் கூறுகின்றனர்.

கணிப்பு என்னாச்சு?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் சிராக் பஸ்வானின் கட்சி 10 முதல் 15 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், அதை எல்லாவற்றையும் மீறி 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஏற்கனவே, 2030ம் ஆண்டுக்குள் மாநில அரசியலுக்கு திரும்புவேன் என்று சிராக் பஸ்வான் கூறியிருந்தார். அவரது இந்த முடிவுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக, இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை