உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாக்கடைகள் சுத்தம் செய்து இளைஞரின் சமூக விழிப்புணர்வு

சாக்கடைகள் சுத்தம் செய்து இளைஞரின் சமூக விழிப்புணர்வு

மழைக்காலங்களில் பெங்களூரின் பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். நகரில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்கள் துார்வாராமல் இருக்கின்றன.இதனால் மழைக் காலங்களில், கால்வாய்களில் தண்ணீர் செல்ல முடியாமல், சாலைகளிலும், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் செல்கிறது. மழைநீருடன், கழிவுநீரும் சேர்வதால் தொற்றுநோய் பரவும் ஆபத்தும் உள்ளது.

பாதிப்புக்கு பின்

பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், பாதிப்பு ஏற்பட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கின்றனர். கோடைக்காலங்களில், துார்வாரினால், மழைக்காலங்களில் தண்ணீர் சுலபமாக செல்ல வசதியாக இருக்கும். பாதிப்பு ஏற்படும் பகுதிகளை பெயரளவுக்கு அதிகாரிகள் சர்வே எடுக்கின்றனர். அதை செயல்படுத்துவதிலும் ஆர்வம் காண்பிப்பதில்லை.மாநகராட்சி அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகளை, பெங்களூரு இந்திராநகரில் வசிக்கும் துஷ்யந்த் துபே, 32, என்ற இளைஞர் செய்கிறார். ஆம், அவர் வசிக்கும் பகுதிகளில் மழை பாதிப்பு ஏற்படும்போது, சாக்கடையில் ஏற்படும் அடைப்பை, முன் பின் யோசிக்காமல், தானே சரி செய்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.கைகளால் தொடுவதை அசிங்கம் என்று நாம் நினைப்பதை, அந்த இளைஞர் சமூக அக்கறையுடன் செயல்படுவதை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டுகின்றனர்.கொரோனா கால கட்டத்தில், தன் சொந்த செலவில் தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களை தேடிச் சென்று, உணவு பொட்டலங்களை வழங்கி மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். தன்னையும், தன் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள நேரமில்லை என்பவர்களை பலரையும் பார்த்துள்ளோம்.

முழு மகிழ்ச்சி

ஆனால், சமூகத்துக்காக தன்னை அர்ப்பணித்து, முழு மகிழ்ச்சியுடன் சேவை செய்து வருகிறார். அவர் செல்லும் வழியில், சாலையில் ஏதாவது இடையூறாக இருந்தால், அதை உடனே அகற்றிவிட்டு தான், முன்னே செல்வார். யாருக்காவது சட்ட சேவை தேவைப்பட்டால், இலவசமாக உதவி செய்கிறார்.இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு அமுத பெருவிழாவை கொண்டாடும் வகையில், சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில், 75 பேரின் ஓவியங்களை, சர்.சி.வி.ராமன் அரசு பொது மருத்துவமனை அருகில் காம்பவுண்ட் சுவற்றில் வரைந்து அசத்தினார்.இவரது இந்த பணியை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பெருமையுடன் பேசி, இத்தகைய இளைய சமூதாயம் இன்றைய தலைமுறைக்கு தேவை என்றார்.

நல்லது மட்டுமே செய்வோம்!

சமூக ஆர்வலர் துஷ்யந்த் துபே கூறியதாவது:நம் உடலை விட்டு, உயிர் பிரியும் போது, எதுவுமே கொண்டு செல்வதில்லை. நம்மை வாழ வைக்கும் மண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டும். நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நல்லதை மட்டுமே நினைப்போம். நல்லது மட்டுமே செய்வோம். ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். யாரையும் குறை கூறாமல், நாமே களத்தில் இறங்கி பணி செய்தால், எளிதில் தீர்வு காணலாம்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ