ராஜினாமா மிரட்டல் முதல்வர் சித்து அச்சம்
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மூத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்காமல், ஓரிரு முறை வெற்றி பெற்ற பெரும்பாலானோருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.இதனால் மூத்தவர்கள் கடும் கோபம் அடைந்தனர். தங்களை விட வயதிலும், அனுபவத்திலும் இளையவர்களான அமைச்சர்கள் தங்களது பேச்சை கேட்பதில்லை, நாங்கள் போன் செய்தாலும் எடுப்பதில்லை என்று கோபத்தை வெளிப்படுத்தினர். முதல்வருக்கு கடிதம்
குறிப்பாக, எம்.எல்.ஏ., பி.ஆர். பாட்டீல், அமைச்சர்களுக்கு எதிராக முதல்வருக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இதனால் அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்களை சரிக்கட்டும் வகையில் வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. பி.ஆர். பாட்டீல், முதல்வரின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவிக்கு இணையான அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனாலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசியல் ஆலோசகர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.மேலும் தனது தொகுதிக்கு சரியாக நிதி கிடைப்பதில்லை என்றும், வாக்குறுதி திட்டங்களால் தான் நிதி யாருக்கும் கிடைப்பதில்லை என்றும் வெளிப்படையாக கூறினார். அவரின் இந்த கருத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாரிய பதவி
இந்நிலையில், பி.ஆர். பாட்டீலை தொடர்ந்து மேலும் சில எம்.எல்.ஏ.,க்கள் தங்களது வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. வாரிய தலைவர் பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் அந்த பதவியில் மனதிற்கு பிடித்து இருக்கவில்லை. வேறு வழியின்றி தான் உள்ளனர். வாரிய தலைவர் பதவியில் இருந்தாலும் தங்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்று அவ்வப்போது கேட்டு வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அமைச்சர் பதவிக்காக 25க்கும் மேற்பட்ட மூத்த எம்.எல்.ஏ.,க்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். ஒருவேளை தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கா விட்டால் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வோம் என்று மிரட்டல் விடுக்கவும் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இது, முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்களை கண்டறிந்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் முதல்வர் தரப்பு ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. -- நமது நிருபர் --