உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மது கடைகளுக்கு உரிமம் வழங்க பல கோடி ரூபாய் வசூல்!: கலால் அமைச்சரின் உதவியாளர் மீது கவர்னரிடம் புகார்

மது கடைகளுக்கு உரிமம் வழங்க பல கோடி ரூபாய் வசூல்!: கலால் அமைச்சரின் உதவியாளர் மீது கவர்னரிடம் புகார்

பெங்களூரு: மது கடைகளுக்கு உரிமம் வழங்க, பல கோடி ரூபாய் வசூல் செய்ததாக, கலால் துறை அமைச்சர் திம்மாபூரின் உதவியாளர் மீது, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், மது விற்பனையாளர்கள் சங்கம் புகார் அளித்து உள்ளது.முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., அமைச்சரவையில், கலால் துறை அமைச்சராக இருப்பவர் திம்மாபூர். இவர் சட்டவிரோதமாக 1,000 மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கி 300 கோடி முதல் 700 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக, கர்நாடக மது விற்பனையாளர்கள் சங்கத்தினர் பரபரப்பு புகார் தெரிவித்தனர்.திம்மாபூர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிற்கும், சித்தராமையாவுக்கும் கடிதம் எழுதினர். 'கலால் அமைச்சரின் வார வருமானம் 18 கோடி ரூபாய்' என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக்கும் குண்டு துாக்கி போட்டார்.ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் திம்மாபூர், ராஜினாமா செய்யவும் மறுக்கிறார். கலால் அமைச்சர் மீதான குற்றச்சாட்டு குறித்து எதுவும் பேசாமல், சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மவுனம் சாதித்து வருகின்றனர்.இந்நிலையில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், கர்நாடக மது விற்பனையாளர்கள் சங்கத்தினர் அளித்த புகார்:கலால் அமைச்சர் திம்மாபூரின் தீவிர ஆதரவாளரும், அவரது உதவியாளருமான ஜீவன் ஷெட்டி தான் கலால் துறையில் நடந்த முறைகேடுகளுக்கு முக்கிய காரணம். புதிய பார்களுக்கு அமைச்சரிடம் இருந்து விரைவில் உரிமம் பெற்று தருவதாக கூறி, பல்வேறு பார் உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி உள்ளார்.ஆனால், யாருக்கும் உரிமம் வாங்கி கொடுக்கவில்லை. பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டால், அமைச்சர் திம்மாபூரிடம் கொடுத்ததாக கூறியுள்ளார்.பார் உரிமையாளர்கள் மட்டுமின்றி, கலால் துறையில் பணியாற்றுபவர்களிடமும், பதவி உயர்வு பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்து ஏமாற்றி உள்ளார். அமைச்சர் திம்மாபூர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக ஜீவன் ஷெட்டியும் இருப்பார். அவர் செய்த முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்த, முதல்வர் சித்தராமையாவுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டு உள்ளது.பார் உரிமையாளரான ராமகிருஷ்ணா என்பவர் கூறுகையில், ''புதிய பார் துவங்க உரிமம் பெற்று தருவதற்காக, ஜீவன் ஷெட்டி என்னிடம் 25 லட்சம் ரூபாய் வாங்கினார். உரிமம் பெற்று தரவில்லை. பணத்தை கேட்ட போது கொடுக்க மறுத்தார். போலீசில் புகார் செய்வேன் என்று கூறிய போது, பல முறை சிறை சென்றுள்ளேன். புகார் அளித்தாலும் எனக்கு பிரச்னை இல்லை என்று கூறினார்.''கலால் துறை அமைச்சரின் அலுவலக அதிகாரிகள், உதவியாளர்கள் எவ்வளவு பணம் பெற்றுள்ளனர் என்று, கவர்னருக்கு விளக்கமாக கடிதம் எழுதி புகார் கொடுத்து உள்ளோம். முதல்வர் அலுவலகம், லோக் ஆயுக்தா தலைமை அலுவலகம், மத்திய அமைச்சர் குமாரசாமி, எதிர்க்கட்சி தலைவர் அசோக் ஆகியோருக்கும் கடிதம் எழுதி உள்ளோம்,'' என்றார்.இந்நிலையில், திம்மாபூரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், வரும் நாட்களில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தவும் பா.ஜ., முடிவு செய்து உள்ளது. குறிப்பாக, திம்மாபூரின் சொந்த மாவட்டமான பாகல்கோட்டில் போராட்டத்தை தீவிரப்படுத்த, அந்த மாவட்ட பா.ஜ., தொண்டர்களுக்கு, மாநில தலைவர் விஜயேந்திரா உத்தரவிட்டு உள்ளார். ஏற்கனவே, 'முடா' மற்றும் வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில் அரசு சிக்கி தவிக்கும் போது, கலால் துறையில் நடந்த ஊழலும் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை