3 அமைச்சர்கள் மீதான புகார்; விசாரிக்க கவர்னர் உத்தரவு?
பெங்களூரு : அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், ராஜண்ணா, பிரியங்க் கார்கே மீது கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் அளிக்கப்பட்டு உள்ள புகார்கள் குறித்து, விரைவில் விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்பு இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதாக சம்பந்தப்பட்டோர் புகார் கூறி வருகின்றனர்.மைசூரு முடாவில் இருந்து, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை சட்டவிரோதமாக வாங்கி கொடுத்ததாக, முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்; மைசூரு வரை பாதயாத்திரையும் நடத்தினர்.சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா என்பவர் அளித்த புகாரில், சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய, லோக் ஆயுக்தா போலீசாருக்கு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி முதல்வர் மீது, கடந்த 27 ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது, பெங்களூரு திலக்நகர் போலீஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் வழக்கு பதிவானது. இதன் பின்னணியில் காங்கிரஸ் அரசு இருப்பதாக, பா.ஜ., குற்றச்சாட்டு கூறி உள்ளது.இந்த பரபரப்பான சூழலில், தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல், அரசு நிலங்களை குறைந்த விலைக்கு, சில நிறுவனங்களுக்கு விற்பனை செய்து, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தி இருக்கிறார் என்றும்; கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா, கர்நாடக மாநில அபெக்ஸ் வங்கி பணத்தை முறைகேடு செய்து இருப்பதாகவும் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி என்பவர் புகார் செய்தார்.ஏற்கனவே, கிராம பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே குடும்பத்திற்கு சொந்தமான அறக்கட்டளைக்கு, அரசு ஒதுக்கிய நிலத்தில் முறைகேடு நடந்து இருப்பதாகவும் கவர்னரிடம் புகார் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த மூன்று புகார்கள் அடிப்படையில், மூன்று அமைச்சர்கள் மீதும் விசாரணை நடத்த, கவர்னர் விரைவில் உத்தரவிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.