பதவி பிரமாண விதிகள் மீறல் சிவகுமார் மீது கவர்னரிடம் புகார்
பெங்களூரு: நிதியுதவி வழங்குவதில் விதிகளை மீறியதாக துணை முதல்வர் சிவகுமார் மீது, கவர்னரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.கடந்த பட்ஜெட்டில், பெங்களூரின் மேம்பாட்டுக்கு தனியாக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியுதவியை தொகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கும்படி அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் துணை முதல்வர் சிவகுமார், ஜெயநகர் சட்டசபை தொகுதியை தவிர, மற்ற தொகுதிகளுக்கு தலா 10 கோடி ரூபாய் வழங்கும்படி, மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு ஜெயநகர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமமூர்த்தி அதிருப்தி தெரிவித்தார். பா.ஜ., தலைவர்களும் கூட, சிவகுமாரின் செயலை கண்டித்தனர். இவருக்கு பகிரங்கமாகவே கடிதம் எழுதி, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கண்டனம் தெரிவித்தார்.இதற்கிடையே சிவகுமார் மீது, வக்கீல் யோகேந்திரா, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் நேற்று முன் தினம், எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.புகாரில், 'பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவகுமார், பதவி பிரமாணம் செய்யும்போது, கட்சி பாகுபாடு பார்க்காமல், அரசியல் சாசனத்துக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 'அந்த பதவி பிரமாண விதிகளை மீறியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரியுள்ளார்.