உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் எத்தனை நாட்கள் என்பதில் குழப்பம்

பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் எத்தனை நாட்கள் என்பதில் குழப்பம்

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் 12 நாட்கள் மட்டுமே பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால், மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 13 நாட்கள் விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் ஆகம விதிப்படி 9 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்த துவங்கினர். பின்னர், 12 நாட்களாக மாற்றினர்.இதையடுத்து, 1973, 1974, 1975 மற்றும் 2010ல் அப்போதைய தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் பிரம்மோற்சவ நாட்களை அதிகரிக்க அனுமதி கோரினர். கோலார் மாவட்ட கலெக்டர் மூலம், 13 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்த அனுமதி பெற்றனர்.இதை எதிர்த்து தங்கவயலை சேர்ந்த ரூபேஷ் குமார் என்பவர், 2019ல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கர்நாடக தலைமைச் செயலர், கோலார் மாவட்ட கலெக்டர், உதவி கலெக்டர், வெங்கட் ரமண சுவாமி கோவில் தலைமை அதிகாரி, தங்கத்தேர் குழுவின் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கி, தங்கவயல் தாசில்தார் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கின் விசாரணை முடிந்து, நீதிபதி ஆர்.நடராஜ், கடந்த பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பு வழங்கி உள்ளார். 'பிரம்மோற்சவம் 12 நாட்கள் மட்டுமே, ஜாதி பேதமின்றி உற்சவம் நடத்த வேண்டும்' என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த தீர்ப்பின் நகல், மாவட்ட நிர்வாகத்திற்கு நேற்று தான் கிடைத்தது. இதனால், இம்மாதம் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்கள் மட்டுமே பிரம்மோற்சவம் நடக்கும். இதை வைத்து பார்க்கும் போது, 13 வது நாளன்று, தங்கத் தேர் திருவிழாவுக்கு அனுமதி இல்லை என்று தெரியவருகிறது.ஆனால், ஒரு வாரத்திற்கு முன்னதாக கலெக்டர் அக்ரம் பாஷா உள்ளிட்ட அதிகாரிகள் பிரம்மோற்சவம் பற்றிய நோட்டீசை வெளியிட்டு இருந்தனர். அதில், இம்மாதம் 19 முதல் 31 வரை 13 நாட்கள் விழா நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.இதனால், கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 12 நாட்கள் நடக்குமா அல்லது 13ம் நாளாக தங்கத் தேர் திருவிழா நடக்குமா என்ற குழப்பம் நிலவியது. மாவட்ட நிர்வாகத்திலிருந்து புதிய அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை