உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹசாரே ஊழல்வாதி: காங்கிரஸ்; காங்கிரசுக்கு பயம் - ஹசாரே குழு பதிலடி

ஹசாரே ஊழல்வாதி: காங்கிரஸ்; காங்கிரசுக்கு பயம் - ஹசாரே குழு பதிலடி

புதுடில்லி: அன்னாஹசாரே ஒரு ஊழல்வாதி என்றும் அவர் மக்களை தவறாக திசை திருப்புகிறார் என்றும் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. நாளை மறுநாள் 16 ம் தேதி டில்லியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கவிருக்கும் காந்தியவாதி ஹசாரேவுக்கு ஆதரவு ஒருபுறம் பெருகி வந்தாலும் , காங்கிரஸ் அவர் மீது சேறை வாரி பூசத்துவங்கியுள்ளது. ஹசா‌ரேவின் போராட்டத்தால் காங்கிரஸ் கட்சி பயப்படுவதால் தான் ஊழல் புகார்களை கூறுவதாக ஹசாரே குழு பதிலடி கொடுத்துள்ளது.

நேற்று ஹசாரே அனுப்பிய கடிதத்திற்கு பிரதமர் பதில் அளித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள பதில் கடிதத்தில் மன்மோகன்சிங் கூறியிருப்பதாவது: போலீசார் நிபந்தனையின்படி அனுமதி வழங்கியிருப்பது சட்டத்திற்குட்பட்டது. இதன்படியே அவர் நடந்து கொள்ள வேண்டும். டில்லி போலீஸ் நிர்வாகத்தில் பிரதமர் அலுவலகம் தலையிடாது என்றும் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறுகையில்: பேராட உரிமை இருக்கிறது என்பதற்காக நினைத் நேரமெல்லாம் போராட முடியாது. பிரதம‌ர் தேசிய கொடியேற்றுவதை அவர் விமர்சிப்பது சட்டத்திற்கு எதிரானது. ஒரு காந்தியவாதி இப்படி நடந்து கொள்ளலாமா ? அன்னாஹசாரேயின் நாடு தழுவிய போராட்டத்திற்கு பணம் செலவழிப்பது யார் என தெரியப்படுத்தப்பட வேண்டும். சட்டம் அனுமதியை மதிக்க வேண்டும். இதனை விட்டு சட்டத்தை கையிலெடுக்க அனுமதிக்க முடியாது. லோக்பால் மசோதா நீங்கள் கூறியது போல் நிறைவேற்றப்படால் ஊழல் முழுமையாக ஒழித்து விட முடியும் என நீங்கள் உத்தரவாதம் தரமுடியுமா? இவ்வாறு கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் அம்பிகாசோனி கூறுகையில்: ஹசாரே மக்களுக்கு தவறான தகவல்களை கொடுத்து தவறான வழியில் இழுத்து செல்கிறார் என்றார்.

காங்., செய்தி தொடர்பாளர் மணீஷ்திவாரி கூறுகையில்: இவர் மீது மகராஷ்ட்டிர மாநிலத்தில் கிராமப்புற திட்டங்கள் செயல்படுத்தியதில் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இவர் இந்த நிதியில் இருந்து தமது பிறந்தநாளை கொண்டாடியிருக்கின்றார் . பி.பி., சவந்த்கமிஷனே இதனை விசாரித்து தெளிவுப்படுத்தியுள்ளது.இதற்கு அவர் விளக்கமான பதில் சொல்லட்டும். பிறகு அவர் ஊழலை பற்றி பேசட்டும். இவருடன் சேர்ந்துள்ள ஒரு சில டிரஸ்டிகள் மோசடி செய்துள்ளது. என்று திவாரி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில் ஹசாரேயினால் சட்டம் இயற்ற முடியாது. ஒருவரின் தனி விருப்பப்படி அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றபட்ட வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. இவர் சட்டத்தையும், பார்லியையும் கேலிக்கூத்தாக்குகிறார். இதனை ஏற்க முடியாது சமூகத்தில் யாரையும் தற்கொலை செய்ய சட்டம் அனுமதிக்காது. என்று கூறியுள்ளார்.

ஹசாரே குழுவில் உள்ள ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கூறுகையில்: தான் அதிகாரியாக இருந்த போது இப்படி டில்லி போலீசார் போல் நடந்து கொண்டதில்லை. அரசின் கைப்பொம்மைகளாக இருக்க கூடாது என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் பயப்படுகிறது; ஹசாரே பதிலடி: காங்கிரஸ் கட்சியின் ஊழல் புகார் தொடர்பாக பேசிய கிரண்பேடி, ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால் காங்கிரஸ் கட்சி பயப்படுகிறது. இதனால் தான் ஹசாரே மீது ஊழல் புகார் கூறியுள்ளது. ஹசாரே நாட்டின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார் என கூறினார்.

புகாரை நிருபியுங்கள்: அன்னா ஹசாரே :என் மீதான ஊழல் புகாரை அரசு நிருபிக்க வேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். மேலும் அவர், என் மீதான களங்கம் தீரும் வரை போராட்டம் தொடரும். என் மீதான புகார்களுக்கு ஆதாரமில்லை. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை. எங்களுக்கு நிதியுதவி அளிப்பவர்கள் பற்றிய விபரங்கள் 24 மணி நேரத்தில் வெளியிடப்படும். எங்களுக்கு நிதியுதவி அளிப்பவர்கள் தங்களை பற்றிய விபரங்களை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி தங்களுக்கு கிடைக்கும் நிதியுதவி பற்றியும் வெளியிட வேண்டும். முதலில் எங்களது குழுவில் உள்ளவர்களை அரசு குறி வைத்திருந்தது. தற்போது எனது மீதும் குறி வைக்கிறது.லோக்பால் மசோதா வலியுறுத்தி போராட்டம் தொடரும். உண்ணாவிரதத்திற்கு பல இடங்களை கேட்ட போதும் போலீசார் மறுத்து விட்டனர். போலீசார் தலையிட்டாலும் எங்களது போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும் என கூறினார். இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சி, அன்னா ஹசாரே தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த நீதிபதியின் அறிக்கையினை இதுவரை படிக்கவில்லை.காங்கிரஸ் கட்சியின் நிதி குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என கூறினார்.

அன்னா ஹசாரே மீண்டும் களம் இறங்கியிருப்பது ஒரு அரசியல் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 16 ம் தேதி முதல் 18 ம் தேதிக்குள் ஹசாரே போராட்டத்தை நிறுத்திக்கொள்ளாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை இருக்கும் இந்நேரத்தில் சட்ட - ஓழுங்கு பிரச்னை ஏற்படும் என அஞ்சப்படுகிறது. வரும் 18ம் தேதி என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருக்கிறது என்றால் மிகையல்ல.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ