வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்படிதான் பட்டாசு வெடிப்போம்னு.. வெத்து வேட்டு விட்டவனெல்லாம் வரிசையில வா??
புதுடில்லி: “தலைநகர் டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் டில்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: கேரளாவில் டில்லி வந்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். டில்லி மாநகரை சாம்பல் நிற போர்வை போர்த்திருப்பது போல காற்று மாசு சூழ்ந்துள்ளது. காற்றில் நிறைந்துள்ள மாசுக்களால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையில், அரசியல் நிர்பந்தங்களைப் பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம். மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக இந்த விஷயத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து மக்களைக் காக்க, மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்து ஒத்துழைக்கும். டில்லி மக்கள் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஜனவரி வரை நச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர். சுவாசப் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், முதியோர் மிகவும் அவதிப்படுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் டில்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த செயற்கை மழை சோதனையை டில்லி அரசு நடத்துகிறது. இது, இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை. இந்த சோதனைக்கு டில்லி அரசு 34 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. கடந்த 2024 டிசம்பர் 5ம் தேதி, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை இணை அமைச்சர், ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு அளித்த பதிலில், டில்லியில் செயற்கை மழை பெய்விக்க சாத்தியம் இல்லை என காற்று தர மேலாண்மை ஆணையம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வானிலை ஆய்வு மையம் ஆகியவை அறிக்கை அளித்துள்ளது என கூறினார். கடந்த அக். 31ம் தேதி டில்லி - ஐ.ஐ.டி.,யின் வளிமண்டல அறிவியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குளிர்காலத்தில் செயற்கை மழை பெய்வித்து காற்றின் தரத்தை மேம்படுத்த முடியாது' என கூறப்பட்டுள்ளது. அறிவியல் ரீதியாக ஒருமித்த கருத்துக்கள் வெளியாகியுள்ள நிலையில், டில்லி அரசு செயற்கை மழை சோதனை நடத்துவது பல சந்தேகங்களை எழுப்புகிறது. சோதனை நடந்த ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு காற்றின் தரத்தில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டது என டில்லி அரசு கூறுவது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டில்லியில் நேற்று காற்று தரக் குறியீடு நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு 303 ஆக இருந்த நிலையில், நேற்று காலை, 386 ஆக அதிகரித்தது. நாளை வரை காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். டில்லியின் வஜிர்பூரில் உச்சபட்சமாக 439 ஆக பதிவாகியுள்ளது. இது, அபாயகரமான நிலை. அண்டை மாநிலமான ஹரியானாவிலும் காற்றின் தரம் மிக மோசமான நிலையிலேயே நீடிக்கிறது. நேற்று மாலை 4:00 மணிக்கு காற்றின் தரக்குறியீடு குருகிராமில் 357 ஆக பதிவாகி இருந்தது. கர்னால் - 348, குருஷேத்திரம் - 344, கைத்தால் - 341, யமுனா நகர் - 320, பகதுார்கர் - 313, பல்லப்கர் - 319, ஜிந்த் நகர் - 314 ஆக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ரேவாரி மாவட்டம் தருஹேராவில் காற்றின் தரக்குறியீடு 434 ஆக பதிவாகி அபாயகரமான நிலையில் இருந்தது. அதேநேரத்தில், சர்கி தாத்ரி - 288, பானிபட் - 288, மற்றும் சோனிபட் - 284 என காற்றின் தரக்குறியீடு பதிவாகி இருந்தது. இது, மோசமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பொதுத் தலைநகரான சண்டிகரில் காற்றின் தரக்குறியீடு 233 ஆக இருந்தது.
அப்படிதான் பட்டாசு வெடிப்போம்னு.. வெத்து வேட்டு விட்டவனெல்லாம் வரிசையில வா??