புதுடில்லி: ''ஜாதிவாரி, பிரிவினைவாத கொள்கைகளை பின்பற்றுவதால், விரைவில் காங்கிரஸ் மீண்டும் பிளவுப்படக்கூடும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்ற பின், டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்துக்கு வந்த பிரதமர் மோடி பேசிய தாவது: மாபெரும் வரலாற்று தீர்ப்பை தந்து, அனைத்து தேர்தல் சாதனைகளையும் பீஹார் மக்கள் முறியடித்துள்ளனர். இனி, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் காட்டாட்சி, ஒருபோதும் அங்கு வராது. மக்களின் ஆதரவு, மாநிலத்தில் பெரிய புயலை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் மக்களின் சேவகர்கள். எங்களின் கடின உழைப்பு மூலம் மக்களின் மனங்களை திருடியுள்ளோம். இதனால் தான், மீண்டும் ஒருமுறை தே.ஜ., கூட்டணி அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். நாட்டு துப்பாக்கி ஆட்சி மீண்டும் வரக்கூடாது என மக்கள் ஓட்டளித்துள்ளனர். ஜனநாயகத்துக்கு பிழையற்ற வாக்காளர் பட்டியல் அவசியம். அதன் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இந்த பணியின் மூலம், தேர்தல் கமிஷன் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. பீஹார் வெற்றி, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் காட்டாட்சியை எதிர்கொண்ட பெண்களுக்கு கிடைத்த வெற்றி. பீஹார் மக்கள் பொய்களை தோற்கடித்ததுடன், ஜாமினில் வெளியே வந்தவர்களை ஆதரிப்பது இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். மாநிலம் வளர்ச்சியடைய மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். புதிய தொழில்கள், முதலீடுகள் மற்றும் இளைஞர் களுக்கான வேலைவாய்ப்புகளை பீஹார் இனி காணும். காட்டாட்சி நடந்தபோது, பீஹார் தேர்தலில் ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுவதும், வன்முறைகள் நடப்பதும், ஓட்டுப்பெட்டிகளை கைப்பற்றுவதும் வழக்கமாக இருந்தது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இனி இடமில்லை. இந்த முறை அதிகளவு ஓட்டு சதவீதம் பதிவாகியுள்ளது. நக்சல் பாதித்த பகுதிகளில், 3:00 மணி வரை மட்டுமே ஓட்டுப்பதிவு நடந்த காலம் உண்டு. தற்போது, மக்கள் பயமின்றி ஓட்டு போடுகின்றனர். புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலுக்கு அம்மாநில மக்கள் வலுவான ஆதரவை வழங்கியுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி என்றும், அவர்களுக்கு அக்கட்சி பெரிய சுமை என்றும் நான் ஏற்கனவே விமர்சித்திருந்தேன். பொய் குற்றச்சாட்டு, ஜாதிவாரி, பிரிவினைவாத கொள்கைகளை அக்கட்சி பின்பற்றுகிறது. இதனால், காங்கிரஸ் மீண்டும் பிளவுபட வாய்ப்பு உள்ளது. குளத்தில் குதித்த காங்கிரஸ் தலைவர், கூட்டணி கட்சிகளையும் மூழ்கடிக்க பயிற்சி எடுத்தார். காங்கிரசிடம் நாட்டுக்கான நேர்மறையான பார்வை இல்லை. அது முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட் காங்கிரசாக மாறிவிட்டது. அக்கட்சி எதிர்மறை அரசியலில் ஈடுபடுவதை கூட்டணி கட்சிகள் உணர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பீஹார் வெற்றி, கேரளா, தமிழகம், புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநில பா.ஜ., தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. கங்கை நதி பீஹாரில் இருந்து மேற்கு வங்கத்துக்கு பாய்வது போல், பீஹாரில் கிடைத்த வெற்றி, மேற்கு வங்கத்திலும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.