வாரிய தலைவர் பதவி ஏற்க காங்., - எம்.எல்.ஏ., மறுப்பு
விஜயநகரா: கர்நாடக மாநில கைத்தறி வளர்ச்சி வாரிய தலைவர் பதவியை, காங்கிரஸ் எம்.எல்.ஏ., கம்பிளி கணேஷ் ஏற்க மறுக்கிறார்.விஜயநகராவின் கம்பிளி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கம்பிளி கணேஷ். இவரை மாநில கைத்தறி வளர்ச்சி வாரிய தலைவராக நியமித்து, கடந்த மாதம் அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்னும் அவர் பதவி ஏற்கவில்லை; பதவி ஏற்கவும் மறுக்கிறார்.“இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக உள்ளேன். பெரிய வாரியங்களை நிர்வகிக்கும் தகுதி எனக்கு உள்ளது. ஆனால் எனக்கு ஒதுக்கப்பட்ட, வாரியத்தில் வேலையே இல்லை. பெரிய வாரியத்தை ஒதுக்கும்படி, முதல்வர் சித்தராமையாவிடம் தொடர்ந்து கோரிக்கை வைப்பேன்,” என, கணேஷ் கூறியுள்ளார்.எம்.எல்.ஏ., கணேஷ், முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். 2019ல் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு முன்பு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.அங்கு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், முன்னாள் அமைச்சர் ஆனந்த் சிங் மீது, கம்பிளி கணேஷ் கொலைவெறி தாக்குதல் நடத்தியதும், அந்த வழக்கில் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.