புனே: மஹாராஷ்டிராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அரசு நில பேரத்தை, துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த் பவார் ரத்து செய்துள்ளார். இந்நிலையில், இதற்கு முத்திரைத்தாள் கட்டணமாக, 42 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிர்ச்சி மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், தேசியவாத காங்.,கைச் சேர்ந்த துணை முதல்வர் அஜித் பவார் மகன் பார்த் பவார், புனேவில் உள்ள 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள, 40 ஏக்கர் அரசு நிலத்தை, 300 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அதை, தனக்கு சொந்த மான தனியார் நிறுவனத்தின் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாக கூறப் படுகிறது. மேலும், பத்திரப் பதிவுக்கான முத் திரைத்தாள் கட்டணமாக வெறும், 500 ரூபாய் மட்டுமே அவர் செலுத்தியதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் முறைகேடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தின. இதனால், முதல்வர் தேவே ந்திர பட்னவிசுக்கு நெருக்கடி ஏற்பட்ட சூழலில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உயர் மட்ட விசாரணை குழுவை அமைத்தார். தள்ளுபடி அதற்கு அடுத்த சில மணி நேரங்களுக்குள் துணை பதிவாளர், தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மஹாராஷ்டிரா அரசியலில் இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், அரசுக்கு சொந்தமான அந்த நிலம் வாங்குவதை, தன் மகன் பார்த் பவார் ரத்து செய்து விட்டதாக துணை முதல்வர் அஜித் பவார் அறிவித்தார். சர்ச்சைக்குரிய அந்த நிலத்தில் தகவல் மையம் அமைப்பதாக கூறி, முத்திரைத்தாள் பதிவு கட்டணம், 21 கோடி ரூபாய் செலுத்தாமல், பார்த் பவார் தள்ளுபடி பெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில், 'நிலம் வாங்குவதை ரத்து செய்ய விரும்பினால், ஏற்கெனவே செலுத்த தவறிய 7 சதவீத முத்திரைத் தாள் பதிவு கட்டணமான, 21 கோடி ரூபாயுடன், ரத்து செய்வதற்கான முத்திரைத்தாள் பதிவு கட்டணமாக, 7 சதவீதமும் சேர்த்து மொத்தம் 42 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்' என, புனே பத்திரப்பதிவு துறை தெரிவித்துள்ளது.