உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவகுமார் முதல்வராவார் என எம்.பி., சுரேஷ் கூறியதால் சர்ச்சை: லோக்சபா தேர்தல் நேரத்தில் கட்சிக்குள் மீண்டும் குழப்பம்

சிவகுமார் முதல்வராவார் என எம்.பி., சுரேஷ் கூறியதால் சர்ச்சை: லோக்சபா தேர்தல் நேரத்தில் கட்சிக்குள் மீண்டும் குழப்பம்

பெங்களூரு: ''அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு பின், துணை முதல்வர் சிவகுமார் முதல்வராவார்,'' என, அவரது தம்பியும், காங்., - எம்.பி.,யுமான சுரேஷ் கூறியிருப்பது, காங்கிரஸ் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. முதல்வர் நாற்காலியில் அமர்ந்த நாளில் இருந்தே, எப்போது பறிபோகும் என்ற பதற்றத்துடனேயே, சித்தராமையா காலம் கடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.இவர் முதல்வர் பதவியில் அமர்ந்திருப்பதை, சில தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால், இதை வெளிப்படையாக கூற முடியவில்லை.குறிப்பாக துணை முதல்வர் சிவகுமார் ஆதரவாளர்கள், உள்ளுக்குள் வெறுப்பில் உள்ளனர். ம.ஜ.த.,வில் இருந்த சித்தராமையா, காங்கிரசுக்கு வந்து பல ஆண்டுகளாகியும், இவரை தங்களில் ஒருவராக நினைக்க, காங்கிரசில் சில மூத்த தலைவர்கள் தயாராக இல்லை. இப்போதும் சித்தராமையாவை, வேறு கட்சியில் இருந்து வந்தவராகவே பார்க்கின்றனர்.இவர் கடந்த 2013ல், முதன் முறை முதல்வரான போதே, பலத்த எதிர்ப்பு எழுந்தது. நாளடைவில், இவரது ஆதரவு படை அதிகரித்தது. தற்போது காங்கிரஸ் மேலிடத்தில், மற்ற தலைவர்களை விட சித்தராமையாவுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த போது, முதல்வர் பதவிக்கு சித்தராமையா, சிவகுமார் இடையே பலத்த போட்டி எழுந்தது.பல தடைகளுக்கு இடையே, மாநில காங்., தலைவராக பொறுப்பேற்ற சிவகுமார், முதல்வர் கனவுடன் கட்சியை பலப்படுத்தினார். மாநில சுற்றுப்பயணம் செய்து, ஆதரவு திரட்டினார். மூத்த தலைவர்களை ஒருங்கிணைத்தார். கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்ததில், இவரது பங்களிப்பு அதிகம். எனவே, தனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என, சிவகுமார் பிடிவாதம் பிடித்தார்.ஆனால், இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் வீதம், முதல்வராக இருக்கலாம் என, காங்., மேலிடம் ஆலோசனை கூறியது. முதலில், இதற்கு சிவகுமார் சம்மதிக்கவில்லை. சோனியா தலையிட்டு சமாதானம் செய்து, சம்மதிக்க வைத்தார். இதன்படி, முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார். சிவகுமார் அரை மனதுடன், துணை முதல்வர் பதவியை ஏற்றதாக தகவல் வெளியானது.சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்ற, சில நாட்களிலேயே சில தலைவர்கள், முதல்வர் மாற்றம் குறித்து பேச துவங்கினர். அதேபோன்று சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் ராஜண்ணா, ஜமிர் அகமது கான் உட்பட சிலர், 'ஐந்து ஆண்டுகளும் சித்தராமையாவே, முதல்வராக நீடிப்பார்' என, குரல் கொடுத்தனர்.இது, மேலிடத்துக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. 'முதல்வர் பதவி குறித்து வாய் திறக்க கூடாது' என, கட்டளையிட்டது. அதன்பின், சிவகுமாருக்கு செக் வைக்கும் விதமாக, துணை முதல்வர் பதவி குறித்து பேச துவங்கினர்.'மாநிலத்தில், மூன்று துணை முதல்வர் பதவி உருவாக்க வேண்டும். அந்தந்த சமுதாயத்தினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்' என, ராஜண்ணா, பசவராஜ் ராயரெட்டி, ஹரிபிரசாத் போன்ற தலைவர்கள் வலியுறுத்தினர். குழுவாக டில்லிக்கு செல்லவும் தயாராகினர். அப்போதும் மேலிடத்தின் உத்தரவுக்கு பணிந்து மவுனமாகினர்.லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் முதல்வர் பதவி குறித்து பேச்சு அடிபட துவங்கியுள்ளது. பெங்களூரில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, காங்., - எம்.பி.,யும், சிவகுமாரின் தம்பியுமான சுரேஷ் கூறுகையில், ''என் சகோதரரும், துணை முதல்வருமான சிவகுமார், முதல்வர் பதவியில் அமர்வர். இரண்டரை ஆண்டுக்கு பின், அவர் முதல்வராவார். ஆனால் காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்,'' என்றார்.சுரேஷின் பேச்சு, கட்சிக்குள் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்த பின், கர்நாடகாவில் முதல்வர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.'தேர்தலில் அதிக தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். இல்லையென்றால் முதல்வர் பதவியை இழக்க நேரிடும்' என, சித்தராமையாவுக்கு மறைமுகமாக நெருக்கடி தருவதாக, அவரது ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.அதே நேரம், 'இம்முறை லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளன. இக்கட்சிகளை எதிர் கொண்டு, அதிக தொகுதிகளில் வெற்றி பெற திட்டம் வகுக்க வேண்டும். அதை விட்டு விட்டு தேவையின்றி முதல்வர், துணை முதல்வர் பதவி குறித்து பேசுவது அவசியமா' என, தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தலைவர்களின் பேச்சு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்