உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமித் ஷாவுக்கு எதிராக அவதுாறு கருத்து ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்

அமித் ஷாவுக்கு எதிராக அவதுாறு கருத்து ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்

சாய்பாசா: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதுாறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு, ஜார்க்கண்ட் சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது.கடந்த 2018ல், ஜார்க்கண்டின் சாய்பாசாவில் நடந்த பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி., ராகுல், மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அமித் ஷா குறித்து அவதுாறாக பேசியதாக ராகுல் மீது, ராஞ்சி நீதிமன்றத்தில் பிரதாப் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், 'அமித் ஷா குறித்து ராகுல் தெரிவித்த கருத்து அவதுாறானது. அவை, அமித் ஷாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது' என, தெரிவித்துஇருந்தார். இந்த வழக்கு விசாரணை, ஜார்க்கண்டின் சாய்பாசாவில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க் களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது. அவதுாறாக பேசியது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், எம்.பி.,யுமான ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து, சாய்பாசா சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் நேற்று காலை 10:55 மணிக்கு ஆஜரானார். அவரிடம், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு நீதிபதி வலியுறுத்தினார். இதை ராகுல் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, ராகுலுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

'அதானிக்காக அமைதி காக்கும் மோடி'

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கை குறித்து ராகுல் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியர்களே, தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். அவரை பிரதமர் மோடியால் எதிர்க்க முடியவில்லை. இதற்கு காரணம், தொழிலதிபர் அதானி மீதான அமெரிக்காவின் விசாரணைதான். மோடி, அதானி குழுமம் மற்றும் ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தங்களுக்கு இடையிலான நிதி தொடர்புகள் வெளிப்பட்டு விடும் என்ற அச்சுறுத்தலால்தான், மோடியால் டிரம்பை எதிர்க்க முடியவில்லை. அவரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். நாட்டின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானியின் 'க்ரீன் எனர்ஜி' நிறுவனம். அமெரிக்காவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பெறுவதற்காக, அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு 2,200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணை அமெரிக்காவில் நடந்து வரும் சூழலில், ராகுல் இவ்வாறு விமர்சித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !