| ADDED : நவ 28, 2025 11:50 AM
புதுடில்லி: எந்தவொரு போரிலும் வெற்றி பெற வேண்டுமானால், மிக விரைவான தகவல் தொடர்பு வசதிகள் அவசியம் இருக்க வேண்டும் என்று பாதுகாப்பு படை ஒருங்கிணைப்பு தளபதி மார்ஷல் அசுதோஷ் தீட்சித் தெரிவித்துள்ளார்.ஏஎன்ஐ நிறுவனம் நடத்திய தேசிய பாதுகாப்பு மாநாட்டில், கலந்து கொண்ட பாதுகாப்பு படை ஒருங்கிணைப்பு தளபதி மார்ஷல் அசுதோஷ் தீட்சித். போரின் போது இந்திய ராணுவத்திற்கு பிறப்பிக்கப்படும் கட்டளைகள் குறித்து விளக்கமாக கூறினார்.அவர் கூறியதாவது; ஆப்பரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்டம் தான். இது போர் ஆரம்பிப்பதற்கான முன்னறிவிப்பு என்று சொல்லலாம். ராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் குழுவிடம் இருந்து தான் அனைத்து தகவல்களும் வரும். களத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து கட்டளையை பிறப்பிக்கும் தளபதி தான் முடிவு எடுப்பார்.போர்களில் வெற்றி அடைவதற்கு, எந்த வகையிலும் தோல்வியடையாத மற்றும் மிக விரைவான தகவல் தொடர்பு நமக்குத் தேவை. அந்த வகையில், ஆப்பரேஷன் சிந்தூரில், நீங்கள் பார்த்தது வெறும் முன்னோட்டம் தான். மேலும், ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு முயற்சியில் நாங்கள் பணியாற்றி வருவதால் இது சாத்தியமானது.போர் பல முனைகளில் நடக்கும். அதனை சமாளிக்கும் விதமாக, தங்களின் செயல்பாடுகளில் திறமை பெற்றிருக்க வேண்டும். எந்தவொரு போரிலும் வெற்றி பெற வேண்டுமெனில், முதலில் எதிரி வெல்ல முடியாத அளவுக்கு, நாம் முன்னிலை பெற வேண்டியது முக்கியம்.இந்திய விமானப்படை தங்களின் வழக்கமான பணிகளை மேற்கொண்டாலும், ராணுவம், கப்பற்படை போன்றவற்றுடன் முழுமையாக ஒருங்கிணைந்து செயல்படும். 1971ம் ஆண்டு ராணுவம் மற்றும் கடற்படையினருடன் இணைந்து தாங்கைல் ஆப்பரேஷனை மேற்கொண்டோம். ராணுவம் மற்றும் கடற்படையினருடன் விமானப்படை ஒருங்கிணைக்கப்பட்டது. அதன் மூலம் தான் வங்கதேச போரில் இந்திய ராணுவம் முன்னிலை பெற்றது.இவ்வாறு அவர் கூறினார்.