கிரைம் கார்னர்
டில்லி ஜல் போர்டு ஊழியர் மர்மமான முறையில் மரணம்
புதுடில்லி: டில்லி ஜல் போர்டு ஊழியர் மர்மமான முறையில், கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரின் உடலை கைப்பற்றியுள்ள போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் மதியம், 3:30 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த ஆங்குர் ரதி, 25, என்பவர், தன் தந்தை சுரேஷ்குமார் ரதி, 59, ரோஹிணி அருகே உள்ள தன் பிளாட்டில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடப்பதாக, தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த போலீசார், டில்லி ஜல் போர்டு ஊழியரான அவரின் உடலை சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு அனுப்பி, பிரேத பரிசோதனை செய்தனர். அதன் அறிக்கை வெளியான பின் தான், சுரேஷ்குமார் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும். அவ்வப்போது அந்த பிளாட்டுக்கு வந்து செல்லும் சுரேஷ்குமார், இரண்டு நாட்களுக்கு முன், அலுவலகம் செல்வதாக கூறி சென்றவர் திரும்பி வராததால், சந்தேகம் அடைந்த அவரின் மகன், உட்புறமாக பூட்டப்பட்ட அந்த அறைக்குள் மாற்று சாவி போட்டு திறந்து உள்ளே சென்று பார்த்த போது, அறை ஒன்றில் தந்தை சுரேஷ்குமார் இறந்து கிடந்தார். கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு, மர்மமான முறையில் இறந்த சுரேஷ்குமாருக்கு அனிதா, 53, என்ற மனைவியும், ஆங்குர் ரதி என்ற மகனும் உள்ளனர். போலீஸ் விசாரணையில்
சிக்கிய மூன்று திருடர்கள்
புதுடில்லி: அதிகாலையில் வீடு ஒன்றில் புகுந்து பொருட்களை திருடி விட்டு, வேகமாக ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த மூவர், காபஷெரா என்ற இடத்தில், கார் ஒன்றுடன் மோதினர். கார் உரிமையாளர் போலீசில் அளித்த புகாரின் படி, அந்த மூவரிடம் போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த போது, அந்த மூவரும் திருடர்கள் என்பது தெரிந்தது. டில்லியில் உள்ள காபஷெரா என்ற இடத்தில் நேற்று காலை, 8:00 மணிக்கு, மூன்று பேர் வந்த ஸ்கூட்டர், கார் ஒன்றுடன் மோதியது. இதில் காரில் வந்த நபருக்கும், ஸ்கூட்டரில் வந்தவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, விவகாரம் போலீசுக்கு சென்றது. போலீசார், அந்த மூவரிடம் விசாரித்து கொண்டிருந்த போது, ரோஹித் ரவிதாஸ், 25, கரம்ஜீத், 28, பங்கஜ், 33, ஆகிய மூன்று பேரும், போலீசார் முன்னிலையில் பதற்றமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது, அதிகாலை நேரத்தில் தன் வீட்டில் நுழைந்த மூன்று பேர், அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்றதாக, ஒருவர் புகார் கொடுக்க வந்தார். அப்போது, விசாரித்து கொண்டிருந்த மூவரும், நடுக்கம் அடைந்ததை பார்த்த போலீசார், அவர்களிடம் 'முறையாக' விசாரித்த போது, அவர்கள் தான் அதிகாலை நேரத்தில் அந்த புகார்தாரின் வீட்டில் புகுந்து, பணம், நகைகள் மற்றும் மொபைல் போன்களை துாக்கிச் சென்றது தெரிந்தது. அதையடுத்து, கார் மீது மோதிய ஸ்கூட்டர் வழக்கு விசாரணையை ஒத்திவைத்த போலீசார், அதிகாலையில் வீட்டில் நுழைந்து திருடிய அந்த மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து பொருட்களை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர். கார் மீது தாங்கள் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மோதியதை அப்படியே விட்டுச் சென்றிருந்தால், மூவரும் போலீசில் சிக்கியிருக்க மாட்டோம் என தங்கள் விதியை நினைத்து வருந்தினர். சிறுமி மீது துப்பாக்கிச்சூடு
மர்ம நபருக்கு போலீஸ் வலை
பரீதாபாத்: டில்லி அருகே உள்ள ஹரியானாவின் பரீதாபாத் நகரில், 17 வயது சிறுமி மீது துப்பாக்கியால் சுட்டு, தப்பிய நபரை போலீசார் தேடுகின்றனர். தோள்பட்டை மற்றும் அடிவயிறு பகுதிகளில் பலத்த காயமடைந்த அந்த பெண், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். பரீதாபாதின் ஷியாம் காலனி என்ற இடத்தில் நேற்று காலையில் இந்த சம்பவம் நடந்தது. பெண் நண்பர் ஒருவருடன் சாலையில் அந்த சிறுமி வந்து கொண்டிருந்தார். அவரின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்த அந்த மர்ம நபர், அந்த பெண் அருகே வந்ததும், மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, சரமாரியாக சுட்டார். இதில், அடிவயிறு மற்றும் தோள்பட்டை ஆகிய இடங்களில் படுகாயம் அடைந்த அந்த சிறுமி, ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த போது, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். போலீஸ் விசாரணையில், அந்த சிறுமிக்கு நன்கு பழக்கமான நபர் தான், அவரை துப்பாக்கியால் சுட்டிருக்க வேண்டும். ஏனெனில், எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல், அந்த சிறுமி அந்த நபருடன் பேசிக் கொண்டிருந்தார். எனவே, இருவரும் நன்கு தெரிந்தவர்களாகவே இருக்க வேண்டும் என போலீசார் கூறினர். தலைமறைவான அந்த நபரை பிடிக்க போலீசார், வலை விரித்துள்ளனர். டில்லி அரசு பஸ்சில் திடீர் தீ
பெரும் விபத்து தவிர்ப்பு
புதுடில்லி: டில்லியில், சாலையில் சென்று கொண்டிருந்த டி.டி.சி., பஸ் திடீரென தீப்பிடித்தது. தென் மேற்கு டில்லியின் தவுலா கான் என்ற பகுதியில் நேற்று காலையில், டில்லி போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ் ஒன்றில் தீப்பிடித்ததாக, தீயணைப்பு துறையினருக்கு நேற்று, பகல், 12:00 மணிக்கு தகவல் கிடைத்தது அடுத்த சில நிமிடங்களில் அங்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால், அந்த பஸ் லேசான சேதம் அடைந்தது. தீப்பிடித்ததை அறிந்ததும், பயணியர் அனைவரையும் பஸ் ஊழியர்கள் இறக்கி விட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வீடு மீது மர்ம நபர்கள்
துப்பாக்கியால் சுட்டனர்
புதுடில்லி: கிழக்கு டில்லியின் ஷதாரா என்ற இடத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், வீடு ஒன்றின் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு முன், அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு, கொலை மிரட்டல் விடுத்தனர். கிழக்கு டில்லியின் ஷதாரா என்ற இடத்தில் உள்ள பீஹாரி காலனியில் நேற்று முன்தினம் நள்ளிரவில், வீடு ஒன்றின் மீது மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், யாரும் காயமடையவில்லை. எனினும், துணிகரமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தி, தப்பிச் சென்ற அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு, கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். அவர்கள் யார், எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.