பாதுகாப்பு நெறிமுறைகளை ராகுல் பின்பற்றுவதில்லை சி.ஆர்.பி.எப்., கடிதம்
புதுடில்லி: 'வெளிநாட்டு பயணங்களின் போது லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுகிறார்' என, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை தெரிவித்துள்ளது. காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, மேம்பட்ட பாதுகாப்பு உடன், 'இஸட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி அவருக்கு, தேசிய பாதுகாப்பு படையின் கமாண்டோக்கள் உட்பட, சி.ஆர்.பி.எப்.,பின், 55 வீரர்கள் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்குகின்றனர். இந்நிலையில், சி.ஆர்.பி.எப்., படையின் வி.வி.ஐ.பி., பிரிவுக் கான தலைவர் சுனில் ஜூன் ராகுலுக்கு எழுதிய கடிதம்: சி.ஆர்.பி.எப்., வழங்கியுள்ள பாதுகாப்பை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், வெளிநாடுகளுக்கு செல்கிறீர்கள். இந்தாண்டில் இத்தாலி, வியட்நாம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பிரிட்டன், மலேஷியா ஆகிய நாடுகளுக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நீங்கள் சென்றுள்ளீர்கள். சி.ஆர்.பி.எப்.,பின் மஞ்சள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை நீங்கள் அப்பட்டமாக மீறுகிறீர்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இக்கடிதம், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாக ராகுலுக்கு சி.ஆர்.பி.எப்., கடிதம் எழுதுவது இது முதன்முறை அல்ல. 2020 முதல், 113 முறை பாதுகாப்பு நெறிமுறைகளை அவர் மீறியதாக, 2022ல், சி.ஆர்.பி.எப்., கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.