வான் பாதுகாப்புக்கு நவீன துப்பாக்கிகள் வாங்க முடிவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 'ஆப்பரேஷன் சிந்துார்' தந்த அனுபவத்தின் காரணமாக, எல்லை பகுதி மக்களை வான் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், 'ஏ.கே. 630' என்ற வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை கொள்முதல் செய்வதற்கு, ராணுவ அமைச்சகம் சார்பில் ஒப்பந்தம் கோரப்பட் டுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்ரலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் மீது நம் ராணுவம் 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை எடுத்தது. பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு - -காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் உள்ள நம் குடியிருப்புகளை நேரடியாக குறிவைத்து, ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களையும், ஏவுகணைகளையும் ஏவியது. இந்த தாக்குதலை வான் பாதுகாப்பு மற்றும் விமான படை இணைந்து முறியடித்தன. இதையடுத்து வான் பாதுகாப்பை பலப்படுத்த, 'ஏ.கே. 630' ரக துப்பாக்கிகளை வாங்க ராணுவம் முடிவு செய்தது. இது நிமிடத்திற்கு 3,000 ரவுண்டுகள் வரை சுடும் திறன் உடையது. நான்கு முதல் ஆறு கி.மீ., துாரம் முன்பே இலக்கை கணித்து தாக்கும். 32,000 அடி உயரம் வரை பாதுகாப்பை உறுதி செய்யும். ட்ரோன்கள், ஏவுகணைகள், பீரங்கி குண்டுகளை அழிக்கும். இந்த துப்பாக்கிகளை கொள்முதல் செய்வதற்கு ராணுவ அமைச்சகம் சார்பில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.