டில்லி - காத்மாண்டு பஸ் சேவை நேபாளத்தில் நிலவும் சூழலால் பாதிப்பு
புதுடில்லி:நேபாள நாட்டில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலையால், அந்நாட்டிற்கும், இந்தியாவின் டில்லி நகருக்கும் இடையேயான பஸ் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. நேபாளம் சென்ற இந்திய பஸ், அங்கே சிக்கிக் கொண்டுள்ளதால், அந்த பஸ்சை மீட்க, இந்திய துாதரக உதவிகளை டி.டி.சி., மேற்கொண்டு வருகிறது. டில்லி - காத்மாண்டு பஸ் சேவையை, டி.டி.சி., எனும் டில்லி டிரான்ஸ்போர்டு கார்ப்பரேஷன் என்ற அரசு அமைப்பும், காத்மாண்டு - டில்லி பஸ் சேவையை மைத்ரி பஸ் சேவா என்ற அமைப்பும் மேற்கொள்கிறது. மொத்தம், 1,167 கி.மீ., செல்லும் இந்த பஸ்களுக்கு, 2,800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. டி.டி.சி., பஸ்கள் வால்வோ பஸ்களாகவும், நேபாள அரசு மார்க்கோ போலோ எனும் அசோக் லேலண்ட் பஸ்களையும் இயக்கி வருகிறது. அந்த வழித்தடத்தில் சி.என்.ஜி., எனும், இயற்கை எரிவாயு கிடைக்காது என்பதால், டீசலில் இயங்கும் பஸ்களை டி.டி.சி., இயக்கி வருகிறது. இந்த பஸ்களில் பயணிக்க விரும்பும் பயணியர், போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அந்த நாட்டில் தற்போது நிலவும் அமைதியற்ற சூழ்நிலையால், இந்தியாவிலிருந்து நேபாளம் சென்ற பஸ், அங்கே சிக்கிக் கொண்டுள்ளது. அதை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய துாதரக அதிகாரிகளை டி.டி.சி., நிர்வாகம் தொடர்பு கொண்டு வருகிறது.