டில்லி-கொல்கத்தா சாலையில் 20 கி.மீ. டிராபிக் ஜாம்; 4 நாட்களாக காத்திருக்கும் வாகன ஓட்டிகள்
புதுடில்லி; டில்லி-கொல்கத்தா சாலையில் கிட்டத்தட்ட 20 கிமீ தொலைவுக்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4வது நாளாக சரக்கு வாகனங்கள் சாலையில் அணிவகுத்து காத்துக் கிடக்கின்றன.தேசிய நெடுஞ்சாலை எண் 19, கொல்கத்தாவையும், தலைநகர் டில்லியையும் இணைக்கும் சாலையாகும். நாட்டின் முக்கிய நெடுஞ்சாலையான இதில் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளும், வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த சாலையை அகலப்படுத்தும் வகையில் அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.ஆகையால், போக்குவரத்து நெருக்கடியில் இந்த சாலை தத்தளித்து வருகிறது. கடும் மழையும் பெய்ய அதன் எதிரொலியாக சாசராம்-ரோஹ்டாஸ் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 3 நாட்களாக இதே நிலை நீடித்ததால் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள், வேன்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து காத்திருக்கின்றன.போக்குவரத்து நெருக்கடி காரணமாக கிட்டத்தட்ட 15 கிமீ முதல் 20 கிமீ வரை வாகனங்கள் சாலையில் நிற்கின்றன. மழையின் ஊடே வாகனங்கள் மெல்ல, மெல்ல ஊர்ந்து செல்கின்றன. 4வது நாளாக இன்றும் போக்குவரத்து முடங்கி உள்ளதால் நேர விரயமும், பொருள் இழப்பும் ஏற்படுவதாக சரக்கு லாரி டிரைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். .இதுகுறித்து, டிரைவர் துபன்குமார் கூறுகையில், ஒடிசாவில் இருந்து டில்லிக்கு சரக்கு லாரியுடன் சென்று கொண்டிருக்கிறேன். 3 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து முடங்கி இருக்கிறது. இதுவரை 5 கி.மீ., வரை தான் வாகனங்கள் கடந்துள்ளன என்றார்.மற்றொரு டிரைவரான சஞ்சய் தாஸ் கூறுகையில், கொல்கத்தாவில் இருந்து வருகிறேன். இங்கு போக்குவரத்து முடங்கி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் யாரும் இன்னமும் இங்கே வரவில்லை. டீ, பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டு 4 நாட்களாக தவித்துக் கொண்டு இருக்கிறோம் என்றார்.