| ADDED : செப் 11, 2024 01:39 PM
புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, கெஜ்ரிவாலை ஜூன் 26ம் தேதி திஹார் சிறையில் வைத்து கைது செய்தது. கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமின் கோரியும் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். வழக்கை செப்டம்பர் 5ம் தேதி விசாரித்த நீதிபதிகள் உத்தரவை ஒத்திவைத்தனர். அப்போது சுப்ரீம்கோர்ட்டில் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். 'சமூதாயத்திற்கு கெஜ்ரிவால் அச்சுறுத்தலாக இல்லை. அமலாக்கத்துறை வழக்கில் விசாரணை நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஜாமின் வழங்கியுள்ளது. ஆனால், ஜாமின் கிடைத்த பின்னர் சிபிஐ கைது செய்திருக்கிறது' அபிஷேக் மனு சங்கி வாதிட்டார். காவல் நீட்டிப்பு!
இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க கூடாது என சி.பி.ஐ., டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இன்று (செப்.,11) முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 25ம் தேதி நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இன்று நீதிமன்றம் ஜாமின் வழங்கும் என ஆம்ஆத்மியினர் எதிர்பார்ப்புடன் இருந்தனர். அதுமட்டுமின்றி ஹரியானா சட்டசபை தேர்தல் களத்தில் பிரசாரத்தில் கெஜ்ரிவாலை களம் இறங்க திட்டமிட்டு, பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்ததாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.