உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் காற்று மாசு குறைக்க செயற்கை மழைக்கு திட்டம்

டில்லியில் காற்று மாசு குறைக்க செயற்கை மழைக்கு திட்டம்

புதுடில்லி: டில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், செயற்கை மழை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக, கடந்த 15 நாட்களில், டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இரண்டு கட்டங்களாக செயற்கை மழை சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து டில்லி அரசு அதிகாரிகள் கூறியதாவது: தலைநகர் டில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை எதிர்கொள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, செயற்கை மழையை உருவாக்குவதன் மூலம், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேகங்களிலிருந்து மழை அல்லது பனித்துளிகள் உருவாகும் வகையில், வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பம் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில், சில்வர் அயோடைடு மற்றும் சோடியம் குளோரைடு போன்ற வேதிப்பொருட்கள், மேகங்களுக்குள் துாவப்படும். இதன் மூலம் மழைத்துளிகள் அல்லது பனிப்படிகங்கள் உருவாக்கப்படும். டில்லியில் காற்று மாசுபாட்டை எதிர்கொள்வதற்கான அவசர நடவடிக்கையாக, கடந்த ஆண்டு, கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து இந்த செயற்கை மழை திட்டத்தைத் தொடங்கியது. கடந்த ஆண்டு, அக்டோபர் மாதத்தில், இரண்டு கட்டங்களாகச் சோதனைகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு முறையும் சில்வர் அயோடைடு மற்றும் சோடியம் குளோரைடு கலந்த எட்டு வேதிப் பொருட்கள் மேகங்களுக்குள் செலுத்தப்பட்டன. இருப்பினும், இந்தச் சோதனைகளால் மழை பெய்யவில்லை. ஆனாலும், இதன் மூலம், குறிப்பிட்ட இடங்களில் காற்றில் உள்ள மாசுபாடு அளவைக் குறைக்க உதவியது. இந்த ஆண்டும் இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, டில்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே, இரண்டு கட்டங்களாக செயற்கை மறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டில்லியில் மேற்கொள்ளப்பட்ட செயற்கை மழை சோதனைகள் 10,000 மீட்டர் உயரத்தில் நடத்தப்பட்டிருந்தன. தற்போது, அதைவிட அதிகமாக, 30,000 மீட்டர் உயரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தீபாவளி மற்றும் சத் பூஜைக்குப் பிறகு, மேலும் சில சோதனைகள் நடத்தப்படும். தீபாவளி முடிந்த பிறகே செயற்கை மழை முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை