| ADDED : ஜூன் 25, 2024 04:45 PM
புதுடில்லி: எதிர்க்கட்சிகள் துணை சபாநாயகர் பதவியை பெற விரும்புகின்றன என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, முதன்முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தே.ஜ., கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சியான ‛இண்டியா' கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷூம் வேட்புமனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்க தே.ஜ., கூட்டணி மறுத்துவிட்டது. இதனால் தேர்தல் கட்டாயப்படுத்தப்பட்டது. எல்லாம் விரைவில் நமக்கு சாதகமாக வரும்..துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சியினர் வசம் இருந்திருக்க வேண்டும். இது தான் எதிர்க்கட்சிகளின் ஒரே கோரிக்கை. சபாநாயகர் பதவிக்கு இண்டியா கூட்டணி போட்டியிடுவதால், எதிர்க்கட்சிகள் துணை சபாநாயகர் பதவியை பெற விரும்புகின்றன. இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.