உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுற்றுலா பயணியரை கவரும் தேவனஹள்ளி கோட்டை..

சுற்றுலா பயணியரை கவரும் தேவனஹள்ளி கோட்டை..

குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புவோர் பிரமாண்டம், பிரமிப்பாக இருக்கும், சுற்றுலா தலங்களுக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டுவர். இத்தகையவர்களுக்கு ஏற்ற இடமாக இருப்பது தேவனஹள்ளி கோட்டை.பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளியில் உள்ளது தேவனஹள்ளி கோட்டை. இந்த கோட்டை 1501ம் ஆண்டில், விஜயநகர பேரரசின் தலைவரான மல்லா பைரே கவுடா என்பவரால் கட்டப்பட்டது. அவரது சந்ததியினர் கட்டுப்பாட்டில் கோட்டை இருந்தது.ஆனால், 1747ல் தேவனஹள்ளி கோட்டை, நங்க ராஜாவால் கைப்பற்றப்பட்டது. மைசூரு உடையார்கள் கட்டுப்பாட்டின் கீழ், கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் பல முறை மராட்டிய மன்னர்கள் சிலர்களால், தேவனஹள்ளி கோட்டை கைப்பற்றப்பட்ட போதிலும், மைசூரு உடையார்கள் மீட்டு வந்தனர். அதன்பின், 1791ம் ஆண்டு ஆங்கிலோ மைசூர் போரின் போது, கார்ன்வாலிஸ் பிரபு கோட்டையை கைப்பற்றினார். இந்தியா சுதந்திரம் அடையும் வரை, ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன்பின்னர் கோட்டையை நன்கு பராமரித்து, பிரமாண்டம், பிரமிப்பாக இருக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது.காலப்போக்கில் பராமரிப்பது நிறுத்தப்பட்டது. 20 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் தேவனஹள்ளி கோட்டை, பழங்கால கட்டட கலைகளை இழந்து விட்டாலும், இன்னும் பார்ப்பதற்கு அழகாக உள்ளது.பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் துாரத்தில் இருக்கிறது. பகல் நேர பயணம் செய்பவர்கள், விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டால், பொழுதுபோக்கிற்காக இந்த கோட்டைக்கு சென்று வரலாம். பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து தேவனஹள்ளிக்கு அடிக்கடி பி.எம்.டி.சி., பஸ் சேவை உள்ளது. தேவனஹள்ளி பஸ் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் துாரத்தில், கோட்டை அமைந்து உள்ளது. காலை 7:00 முதல் இரவு 8:30 மணி வரை, கோட்டை திறந்திருக்கும். நுழைவு கட்டணம் இல்லை. குடும்பத்துடன் ஒரே நாளில் சென்று வருவதற்கு, இந்த கோட்டை மிகவும் ஏற்ற இடமாகும்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்