உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேவகவுடா, குமாரசாமிக்கு பா.ஜ.,வில் திடீர் மவுசு

தேவகவுடா, குமாரசாமிக்கு பா.ஜ.,வில் திடீர் மவுசு

லோக்சபா தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், அரசியல் கட்சி தலைவர்கள் சீட் பெறுவதில் மும்முரமாக உள்ளனர். தங்களுக்கு நெருக்கமான தலைவர்களை சந்தித்து, தங்கள் இருக்கையை பத்திரப்படுத்தி கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.மற்றொரு பக்கம், தற்போது எம்.பி.,யாக பதவி வகிப்பவர்களும் மீண்டும் வாய்ப்பு தரும்படி காய் நகர்த்தி வருகின்றனர். மேலும், கவனிக்க வேண்டியவர்களை, கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்பதாகவும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றன.

அடம் பிடிப்பு

இதே வேளையில், கடந்தாண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், தோல்வி அடைந்தவர்கள், இறுதி கட்டத்தில் வாய்ப்பை நழுவ விட்டவர்களும், லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு தரும்படி அடம் பிடிக்கின்றனர். ஆனால், அந்தந்த கட்சிகளின் மேலிடம் இதுவரை எந்த வாக்குறுதியையும் தரவில்லை என்று தெரிகிறது.அந்த விஷயத்தில், பா.ஜ.,வில் வேட்பாளர்கள் தேர்வு தொகுதி வாரியமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டுக்கு, அக்கட்சி தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் கூட, முன்னாள் அமைச்சர்கள் ஈஸ்வரப்பா, ரேணுகாச்சார்யா உட்பட பலர் வந்து வாய்ப்பு கேட்டனர்.இதற்கிடையில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.ஜ.த., இணைந்த பின், அக்கட்சி தலைவர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. குறிப்பாக, முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோருக்கு பா.ஜ.,வில் மவுசு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

சிபாரிசு

அந்த அளவுக்கு அடிக்கடி பா.ஜ., தலைவர்கள், ம.ஜ.த., தலைவர்களின் வீடுகளுக்கு சென்று 'சீட்' டுக்கு சிபாரிசு செய்யும்படி வலியுறுத்துகின்றனர். முன்னாள் தேசிய பொதுச்செயலர் சி.டி.ரவி, மைசூரு எம்.பி., பிரதாப் சிம்ஹா உட்பட பலர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். இந்த வரிசையில், முன்னாள் அமைச்சர் சுதாகர் சமீபத்தில் சந்தித்து ஆதரவு கோரினார். தனக்கு இருவரும் ஆதரவு அளிப்பதாகவும், சிக்கபல்லாப்பூரில் பணியை ஆரம்பிக்கும்படி பகிரங்கமாகவே தெரிவித்தார்.அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல பா.ஜ., தலைவர்கள் தேவகவுடா, குமாரசாமியை நாடுவதற்கு தயாராகின்றனர். இவர்களுக்கு பா.ஜ.,வின் மாநில, தேசிய தலைவர்களுடன் நெருங்கி பழகுவதால், தங்களுக்கு வக்காலத்து வாங்கி பேசுவர் என்று நினைக்கின்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை