தர்மஸ்தலா, குக்கே கோவில் மோசமான பாதையால் அவதி
தட்சிண கன்னடா: தட்சிண கன்னடாவின் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களான தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யாவுக்கு செல்லும் சாலைகள், மிகவும் மோசமாக உள்ளன. இந்த சாலைகள் வழியாக பயணம் செய்வோர் அரசை திட்டிக் கொண்டே செல்கின்றனர்.தட்சிணகன்னடாவின் தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களாகும். குறிப்பாக குக்கே சுப்ரமண்யா பிரசித்தி பெற்ற பரிகார தலமாக விளங்குகிறது. வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா கோவில்களுக்கு வருகின்றனர்.தர்மஸ்தலாவில் இருந்து, குக்கே சுப்ரமண்யாவுக்கு இணைப்பு ஏற்படுத்தும் சாலை, மேடும், பள்ளமும், குண்டும், குழியுமாக உள்ளன. இந்த வழியாக செல்லும் பக்தர்கள், பொதுமக்கள், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.சில மாதங்களாக மழை பெய்ததால், தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யாவுக்கு செல்லும் சாலைகளில் பள்ளங்கள் அதிகரித்துள்ளன. பள்ளங்களில் நீர் நிரம்பியுள்ளதால், வாகன பயணியர் உயிரை கையில் பிடித்தபடி பயணம் செய்ய வேண்டியுள்ளது.ஆண்டுதோறும் சாலைகளுக்கு தார் போடப்படுகிறது. ஆனால் தண்ணீர் சுமுகமாக செல்வதற்கு, சரியான சாக்கடை வசதி இல்லை. இதனால் பணிகள் நடந்து ஓராண்டு முடிவதற்குள், சாலைகள் பாழாகின்றன; பள்ளங்கள் ஏற்படுகின்றன.தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா கோவிலில் திருவிழா நெருங்குகிறது. அப்போது பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகம் இருக்கும். எனவே, அதற்குள் சாலைகளை சீரமைக்கும்படி பலரும் வலியுறுத்துகின்றனர்.