பன்சூரி மீதான அவதுாறு வழக்கு தள்ளுபடி
கரோல்பாக்:கடந்த 2023 அக்டோபர் 5ல் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு பா.ஜ., - எம்.பி., பன்சூரி ஸ்வராஜ் பேட்டி அளித்தார்.இதுதொடர்பாக டில்லி கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பன்சூரி மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்திர ஜெயின் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். தன் மனுவில் அவர் கூறியிருந்ததாவது:தொலைக்காட்சி பேட்டியில் என் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 1.8 கிலோ தங்கம், 133 தங்க நாணயங்கள் தவிர, 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக பன்சூரி கூறினார்.எனக்கு எதிராக அவதுாறு கருத்துக்களை பன்சூரி தெரிவித்தார். அதை லட்சக்கணக்கானவர்கள் பார்த்தனர். என்னை ஊழல்வாதி, மோசடி செய்பவர் என்று கூறி, என்னை பற்றி பன்சூரி ஸ்வராஜ் அவதுாறு பரப்பினார்.இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.இந்த வழக்கை கூடுதல் தலைமை நீதிபதி நேஹா மிட்டல் விசாரித்து வந்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் பன்சூரி ஸ்வராஜுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்குமென கூறப்பட்டது.இந்த நிலையில் சத்யேந்திர ஜெயின் தொடர்ந்த அவதுாறு வழக்கை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.