பெல்டங்கா: மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்டுவதாக அறிவித்ததால், திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., ஹுமாயூன் கபீர், ஜ னதா உன்னாயன் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை நேற்று துவக்கினார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இக்கட்சியின் எம்.எல்.ஏ.,வாக இருந்த ஹுமாயூன் கபீர், சில நாட்களுக்கு முன், உத்தர பிரதேசம் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மேற்கு வங்கத்தில் உருவாக்க விரும்புவதாக தெரிவித்தார். இதற்கான பணிகளை அவர் முன்னெடுத்ததை அடுத்து, திரிணமுல் காங்., கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதைதொடர்ந்து, பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிச., 6ல், மேற்கு வங்கம் முர்ஷிதாபாதின் பெல்டங்காவில் பாபர் மசூதி கட்ட கபீர் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், ஜனதா உன்னாயன் என்ற புதிய கட்சியை நேற்று துவக்கினார். பெல்டங்காவில் நடந்த நிகழ்ச்சியில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் தன் கட்சி சார்பில் போட்டியிடும் எட்டு வேட்பாளர்களின் பெயரை அறிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில், மாநிலத்தில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்திலும் கபீர் பயணித்துள்ளார். கடந்த 2015ல் முதல்வர் மம்தாவை விமர்சித்ததை அடுத்து, திரிணமுல் கட்சியில் இருந்து அவர் ஆறு ஆண்டுகள் வெளியேற்றப்பட்டார். கடந்த 2016ல், ரெஜிநகரில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின், காங்கிரசில் சேர்ந்த கபீர், 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, பா.ஜ.,வுக்கு தாவினார். முர்ஷிதாபாத் தொகுதியில் போட்டியிட்ட அவர், மூன்றாம் இடத்தை பிடித்தார். மீண்டும் திரிணமுல் காங்கிரசுக்கு திரும்பிய கபீர், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு பரத்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வானார்.