பாட்னா, ''ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் குமார் திரும்ப வருவதென்றால், அவருக்கான கதவு எப்போதும் திறந்திருக்கும்,'' என, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முன்பு ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்திய நிதீஷ் குமார், சமீபத்தில் அதிலிருந்து விலகி பா.ஜ.,வுடன் கைகோர்த்தார். இதையடுத்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி அதிகாரத்தை இழந்தது.கடந்த ஜனவரி 28ல் பீஹாரில் புதிய அரசை அமைத்த நிதீஷ், அதற்கடுத்து நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற்றார். இந்நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்நேற்று சட்டசபை வளாகம் வந்தார். ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க வந்தவர், நிதீஷ் குமாரை சந்தித்து கைகுலுக்கினார். இதையடுத்து, அங்கிருந்த செய்தியாளர்கள், 'நிதீஷ் குமாருடனான நல்லுறவு தொடருமா' என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த லாலு பிரசாத் யாதவ், ''முதலில் அவர் திரும்பி வரட்டும், பின்னர் பார்க்கலாம். அவருக்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது,'' என்றார். ஆனால், ஐக்கிய ஜனதா தள நிர்வாகிகள் இதை மறுத்துள்ளனர். இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் கூறுகையில், ''கதவுகள் இனி திறக்கப்படாது. அவர்களுடனான கூட்டணிக்கு இடமே இல்லை,'' என திட்டவட்டமாக தெரிவித்தார்.இதற்கிடையே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மேற்கொண்டுள்ள யாத்திரை நேற்று பீஹார் மாநிலம் சாசராம் பகுதிக்கு வந்தது. அப்போது லாலு பிரசாத் யாதவின் மகனும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், அந்த யாத்திரையில் பங்கேற்றார். ராகுல் பயணித்த வாகனத்தை சிறிது துாரம் தேஜஸ்வி ஓட்டிச் சென்றார். இதன் முடிவில், தேஜஸ்வியை ராகுல் பாராட்டி பேசினார்.