உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.24 கோடி போதை பொருள் பறிமுதல்: நைஜீரிய பெண் கைது

ரூ.24 கோடி போதை பொருள் பறிமுதல்: நைஜீரிய பெண் கைது

கே.ஆர்.புரம்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பெங்களூரில் விற்பனை செய்ய முயன்ற 24 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ., போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று அளித்த பேட்டி:ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பெங்களூரில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க, சி.சி.பி., போதைப் பொருள் தடுப்பு பிரிவு பல்வேறு இடங்களில் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது.கே.ஆர். புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டி.சி. பாளையாவில் ஒரு பெட்டி கடையில் போதைப் பொருள் விற்பனை நடப்பதாக, சி.சி.பி., போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த பெட்டி கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சோப்பு, தின்பண்டங்களின் பாக்கெட்டுகளில் போதைப் பொருளை சிறு பொட்டலமாக கட்டி பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.அங்கு 12 கிலோ எடையுள்ள எம்.டி.எம்.ஏ., வெள்ளை, மஞ்சள் கிரிஸ்டல் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு 24 கோடி ரூபாய். இதுதொடர்பாக மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த ரோஸ்லிம், 40, என்ற பெண் கைது செய்யப்பட்டார்.இவர் டில்லியில் வசிக்கும் தன் நாட்டைச் சேர்ந்த ஜூலியட் என்ற பெண்ணிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி, பெங்களூரில் வசிக்கும் நைஜீரியர்கள், ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு விற்பனை செய்தது தெரிந்தது.ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு போதைப் பொருளை விற்பனை செய்யவும் திட்டமிட்டு இருந்தார். தொழில் விசாவில் இங்கு வந்தார். விசா முடிந்து ஆறு மாதங்கள் ஆகியும் இங்கு சட்டவிரோதமாக தங்கி இருந்தார்.கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 70 சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கர்நாடகாவில் முதன் முறையாக மிக பெரிய அளவில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை