பணமோசடி வழக்கு: பிரியங்கா கணவர் ராபர்ட் மீது குற்றப்பத்திரிகை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஆயுத தரகர் சஞ்சய் பண்டாரி தொடர்புடைய வழக்கில் பணமோசடியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்பி பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.ஏற்கனவே, ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் நடந்த நில பேரத்தில் நடந்த நிதிமுறைகேடுகள் குறித்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் ராபர்ட் வாத்ரா உள்ளார். ஹரியானாவில் நடந்த நில பேரம் தொடர்பான வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர்.மேலும் கடந்த 2009 ம் ஆண்டு ஆயுதத் தரகர் சஞ்சய் பண்டாரி, ராபர்ட் வாத்ராவின் அறிவுறுத்தலின் பேரில், அவர் வழங்கிய நிதியில் லண்டனில் ஒரு சொகுசு பங்களாவை புனரமைத்தார் என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ராபர்ட் வாத்ரா மறுத்து இருந்தார். இந்த வழக்கில் கடந்த 2023 ம் ஆண்டு சஞ்சய் பந்தாரி மீது அமலாக்கத்துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கு தொடர்பாக ராபர்ட் வாத்ராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.இந்நிலையில், இந்த வழக்கில் நடந்த பண மோசடி தொடர்பாக ராபர்ட் வாத்ரா மீது, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் ராபர்ட் வாத்ரா 9வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த குற்றப்பத்திரிகை மீது வரும் 9ம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது.