புதுடில்லி : ஒரே நாடு - ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்துவதற்காக, 18 சட்டத் திருத்தங்கள் செய் ய வேண்டியுள்ளது. இது தொடர்பான மூன்று மசோதாக்களை, வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய அரசு தீவிரமாக உள்ளது.லோக்சபா, சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்ய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தன் அறிக்கையை கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்தது. அதில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன.மேலும், இதை செயல்படுத்த மேற்கொள்ள வேண்டிய சட்டத் திருத்தங்கள் தொடர்பாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.இதைத் தொடர்ந்து, இது தொடர்பான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன்படி, மூன்று அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளில் திருத்தம், புதிதாக 12 துணைப் பிரிவுகள் சேர்ப்பது, யூனியன் பிரதேசங்கள் தொடர்பான மூன்று சட்டங்களில் மாற்றம் என, மொத்தம் 18 திருத்தங்கள் செய்ய வேண்டும்.இதற்காக மூன்று மசோதாக்கள் தாக்கல் செய்ய வேண்டும். அதில், அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் தொடர்பான மசோதா, பார்லிமென்டில் நிறைவேற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட வேண்டும். இதைத் தவிர, 50 சதவீத மாநில சட்டசபைகளின் ஒப்புதலும் தேவை.யூனியன் பிரதேசங்கள் தொடர்பான சட்டங்களில் சில மாற்றங்கள் செய்வது தொடர்பான மசோதா, பார்லிமென்டில் தாக்கல் செய்தால் போதும். முதல் மசோதா
ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான இந்த மசோதாவிற்கு, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.இதற்காக, அரசியலமைப்புச் சட்டத்தின் 82 - ஏ பிரிவில், புதிதாக சில துணைப் பிரிவுகள் உருவாக்க வேண்டும். இதைத் தவிர, அரசியலமைப்புச் சட்டத்தின், 83 பிரிவு மற்றும் 327வது பிரிவில் திருத்தங்கள் தேவை.அதாவது, லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கான பதவிக் காலங்கள் தொடர்பான ஒரு நிர்ணயிக்கப்பட்ட தேதியை உருவாக்குவது, இவற்றின் பதவிக் காலங்களில் மாற்றம் செய்வது உள்ளிட்டவை இதில் அடங்கும்.இந்த மசோதா பார்லிமென்டில் நிறைவேறினால் போதும். மாநில சட்டசபைகளின் ஒப்புதல் பெற வேண்டியதில்லை. இரண்டாம் மசோதா
இந்த மசோதா மாநிலங்களின் நிர்வாகம் தொடர்பானது என்பதால், 50 சதவீத மாநில சட்டசபைகளில் ஒப்புதல் பெற வேண்டும்.தற்போதைய நிலையில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவிகள், லோக்சபா, ராஜ்யசபா, சட்டசபைகள், சட்ட மேல்சபை ஆகியவற்றுக்கான தேர்தல்களை, இ.சி., எனப்படும் தலைமை தேர்தல் கமிஷன் நடத்துகிறது. அதே நேரத்தில் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, எஸ்.இ.சி., எனப்படும் மாநில தேர்தல் கமிஷன்கள் நடத்துகின்றன.அரசியலமைப்பு சட்டத்தின்படி, இவை இரண்டும் தனித்தனி அமைப்புகள். அதனால், லோக்சபா, சட்டசபைகளுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த, அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 324 - ஏ என்ற துணைப் பிரிவை புதிதாக உருவாக்க வேண்டும்.ஒரே வாக்காளர் பட்டியல் வெளியிடுவது உள்ளிட்டவையும் இதில் அடங்கும். மூன்றாம் மசோதா
தற்போது, புதுச்சேரி, டில்லி, ஜம்மு - காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்கள், சட்டசபையுடன் கூடியவையாக உள்ளன. இதற்கான, மூன்று தனிச் சட்டங்கள் உள்ளன. லோக்சபா மற்றும் சட்டசபைகளுடன் இந்த யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, பதவிக் காலத்தில் திருத்தம் செய்வது போன்றவை தொடர்பாக, இந்த மூன்று சட்டங்களிலும் திருத்தம் தேவை.இது ஒரு சாதாரண சட்டத் திருத்தமே. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் தேவையில்லை. இதனால், மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை, பார்லிமென்டில் நிறைவேறினால் போதும்.இந்த மூன்று மசோதாக்களையும், வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்வது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.