உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி பிரசாரத்தில் பங்கேற்க ஈஸ்வரப்பா மறுப்பு பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரை காக்க வைத்து ஓட்டம்

பிரதமர் மோடி பிரசாரத்தில் பங்கேற்க ஈஸ்வரப்பா மறுப்பு பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரை காக்க வைத்து ஓட்டம்

ஷிவமொகா, : ஹாவேரி பா.ஜ., 'சீட்' மகன் காந்தேஷுக்கு கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட உள்ள, பா.ஜ., மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, ஷிவமொகாவில் இன்று நடக்க உள்ள, பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரத்தை புறக்கணிப்பதாக, அறிவித்துள்ளார்.கர்நாடகா பா.ஜ., மூத்த தலைவர்கள் ஒருவர் ஈஸ்வரப்பா. லோக்சபா தேர்தலில் மகன் காந்தேஷுக்கு, ஹாவேரி 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதனால் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது அதிருப்தி அடைந்து உள்ளார். ஷிவமொகாவில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும், எடியூரப்பா மகன் ராகவேந்திராவை எதிர்த்து, சுயேச்சையாக போட்டியிட போவதாக அறிவித்து உள்ளார். அவரை கர்நாடக பா.ஜ., தலைவர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் பலன் அளிக்கவில்லை.

காத்திருக்க வைப்பு

இந்நிலையில் நேற்று மதியம் ஷிவமொகாவில் உள்ள ஈஸ்வரப்பா வீட்டிற்கு, கர்நாடக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால், முன்னாள் அமைச்சர் அரக ஞானேந்திரா, எம்.எல்.சி.,க்கள் அருண், ரவிகுமார் சென்றனர். ஈஸ்வரப்பாவை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.அவர்களிடம் சிறிது நேரம் பேசிய ஈஸ்வரப்பா, கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு, அவசரம், அவசரமாக புறப்பட்டு சென்றார். இதனால் அவருக்காக ராதாமோகன் தாஸ் அகர்வால் காத்திருந்தார். ஆனால், இரண்டு மணி நேரமாகியும், ஈஸ்வரப்பா வரவே இல்லை. இதனால் ராதாமோகன் தாஸ் புறப்பட்டு சென்றார்.

குடும்ப அரசியல்

அதன்பின் வீட்டிற்கு வந்த ஈஸ்வரப்பா அளித்த பேட்டி:கர்நாடக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால் என்னை சந்தித்து பேசினார். அவரிடம், சுயேச்சையாக போட்டியிடுவது ஏன் என்று தெளிவாக கூறி உள்ளேன். என் மகனுக்கு எம்.எல்.சி. பதவி தருகிறேன் என்றார்.எம்.எல்.ஏ., - எம்.பி., - எம்.எல்.சி., பதவிக்காக நான் பிரச்னை செய்யவில்லை. கட்சியை ஒழுங்குப்படுத்த வேண்டும். தொண்டர்கள் அவமதிக்கப்படுகின்றனர். ஹிந்துத்வாவை பின்பற்றும் ரவி, பசனகவுடா பாட்டீல் எத்னால் உள்ளிட்டோர் நசுக்கப்படுகின்றனர். கட்சியை காப்பாற்ற, குடும்ப அரசியலை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.பிரதமர் மோடி, நாளை ஷிவமொகாவுக்கு வந்து ராகவேந்திராவுக்கு பிரசாரம் செய்கிறார். பிரசாரத்தில் நான் பங்கேற்க மாட்டேன். நான் சுயேச்சையாக வெற்றி பெறுவேன். அதன்பின், பிரதமர் மோடியை சந்திப்பேன். போட்டியில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.

மேலிட தலைவர்கள்

சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், மாநில தலைவரை ஏன் உடனடியாக நியமிக்கவில்லை. ஆறு மாதம் அந்த பதவிக்கு யாரையும் நியமிக்க விடாமல் எடியூரப்பா தடுத்தார். கடைசியில் தன் மகனுக்கே வாங்கி கொடுத்து விட்டார். எடியூரப்பாவை வைத்து லிங்காயத் சமூக ஓட்டுகளை பெறலாம் என்று, மேலிட தலைவர்கள் நம்பி கொண்டு இருக்கின்றனர். அப்படி என்றால் எடியூரப்பா, தனி கட்சி ஆரம்பித்த போது, ஏன் அவரால் அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. லிங்காயத் சமூகத்திற்கு மாநில தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என்றால், பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கும், ஒக்கலிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் ரவிக்கும் கொடுத்து இருக்கலாம். கட்சிக்காக அனைத்தையும் தியாகம் செய்தவர் அவர். ஷோபாவுக்கு ஒரு நியாயம், ரவிக்கு ஒரு நியாயமா?இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை