உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் கண்டுபிடிக்கப்பட்ட போலி துாதரகம் ஆடம்பர கார்களுடன் வலம் வந்தவர் கைது

உ.பி.,யில் கண்டுபிடிக்கப்பட்ட போலி துாதரகம் ஆடம்பர கார்களுடன் வலம் வந்தவர் கைது

காஜியாபாத்: உத்தர பிரதேசத்தில் அங்கீகரிக்கப்படாத நாட்டுக்கு போலி துாதரகம் நடத்தி, சொகுசு பங்களா, ஆடம்பர கார்களுடன் வலம் வந்த நபர் கைது செய்யப்பட்டார். அன்டார்டிகா கண்டத்தில் உள்ள, 6.20 லட்சம் சதுர மைல் பரப்பளவைக் கொண்ட ஒரு பகுதி 'வெஸ்டார்டிகா'. 'மைக்ரோநேஷன்' என, அழைக்கப்படும் இந்த நாட்டை, கடந்த 2001ல், அமெரிக்காவை சேர்ந்த கடற்படை அதிகாரியான டிராவிஸ் மெக்ஹென்றி என்பவர் கண்டுபிடித்தார். விசாரணை அண்டார்டிகா கண்டத்தில் இருக்கும் நிலப்பரப்புக்கு என்று தனியாக எந்த வித சட்டதிட்டங்களும் இல்லாததை தெரிந்து கொண்டு, தான் கண்டு பிடித்த வெஸ்டார்டிகாவிற்கு தன்னையே அவர், அதிபராக அறிவித்துக்கொண்டார். அத்துடன், அந்நாட்டிற்கு உள்பட்ட பகுதியை வேறு எந்த நாடும் உரிமை கொண்டாடவும் மெக்ஹென்றி தடை விதித்தார். இங்கு, 2,536 பேர் வசிப்பதாக கூறப்பட்டாலும், அப்படி யாரும் அங்கு இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எந்த நாட்டாலும் அங்கீகரிக்கப்படாத வெஸ்டார்டிகா நாட்டிற்கு, புதுடில்லியில் துாதரகம் செயல்படுவதாக சமூக வலைதளங்களில் சமீபத்தில் தகவல் வெளியானது. அதில், 'கடந்த, 2017 முதல் ஹர்ஷ்வர்தன் ஜெயின் தலைமையில் வெஸ்டார்டிகா நாட்டு துாதரகம், டில்லியில் செயல்படுகிறது' என்ற வாசகத்துடன், ஒரு ஆடம்பர அலுவலகத்தின் புகைப்படமும் பகிரப் பட்டிருந்தது. இந்த பதிவு, சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததை அடுத்து, இது குறித்து ரகசிய விசாரணை மேற்கொள்ள மத்திய புலனாய்வு அமைப்பு உத்தரவிட்டது. இறுதியில், உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில், இந்த அலுவலகம் இருப்பதை அம்மாநில சிறப்பு அதிரடி படை போலீசார் நேற்று முன்தினம் கண்டுபிடித்தனர். பறிமுதல் இரண்டு மாடிகளுடன் கூடிய ஆடம்பர அலுவலகம், ஏராளமான உயர் ரக சொகுசு கார்கள் என, பார்ப்பதற்கு உண்மையான துாதரக தோற்றத்துடன் இருந்த கட்டடத்தைக் கண்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், போலி துாதரக கட்டடத்தில் இருந்த பல்வேறு நாடுகளின் எண்களுடன் கூடிய கார்களின் நம்பர் பிளேட்டுகள், அங்கீகரிக்கப்படாத 12 நாடுகளின் 'பாஸ்போர்ட்'கள், வெளியுறவு அமைச்சகத்தின் முத்திரை அடங்கிய 'ரப்பர் ஸ்டாம்ப்'கள், 34 நாடுகளின் முத்திரைகள், கட்டுக்கட்டாக இருந்த 44 லட்சம் ரூபாய், வெளிநாட்டு கரன்சிகள், நான்கு உயர் ரக சொகுசு கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த அலுவலகத்தை நடத்தி வந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், போலி துாதரக பெயரில், இளைஞர்களை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அவர் வேலைக்கு அனுப்பி வந்தது தெரியவந்துள்ளது. இது தவிர, ஹவாலா வாயிலாக பணமோசடியிலும் ஹர்ஷ்வர்தன் ஜெயின் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டு ஜனாதிபதி, பிரதமர், உலக நாடு களின் தலைவர்களுடன் எடுக்கப்பட்டது போன்ற போலியான புகைப்படங்களை பயன்படுத்தி, பல்வேறு மோசடியில் அவர் ஈடுபட்டதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மோசடி செபோர்கா, பவுல்வியா மற்றும் லோடோனியா போன்ற சிறிய அங்கீகரிக்கப்படாத நாடுகளின் துாதரக பிரதிநிதி என ஜெயின் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு செயல்பட்டு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த 2011ல் சட்டவிரோதமாக செயற்கைக்கோள் போன் வைத்திருந்ததாக இவரை போலீசார் கைது செய்திருந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்து துாதரக பெயரில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர் மட்டுமே, போலி துாதரகத்தை நடத்தியிருக்க முடியாது எனக் கூறியுள்ள போலீசார், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பிருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தஞ்சை மன்னர்
ஜூலை 24, 2025 11:20

இங்கே சிலர் சிலரின் பெயராகத்தான் இருக்கும் என்றும் தங்களுடைய காழ்ப்புணர்ச்சியை காட்ட இருந்தனர்


Arul. K
ஜூலை 24, 2025 08:52

எப்புடி


Kalyanaraman
ஜூலை 24, 2025 08:21

இதன் மூலம் காஸியாபாத்தில் உளவுத்துறையின் தரம் புரிகிறது


நிக்கோல்தாம்சன்
ஜூலை 24, 2025 05:55

வேற லெவல் டா நீ


புதிய வீடியோ