உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்

திருச்சூர்:பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன், 80, உடல்நலக் குறைவால் கேரளாவில் காலமானார்.கேரளாவின் திருச்சூரில் உள்ள இரிஞ்சாலாகூடாவைச் சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஜெயச்சந்திரன் உயிரிழந்தார். இவர் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.சிறு வயதில் மிருதங்க இசையில் தேர்ச்சி பெற்ற ஜெயச்சந்திரன், பள்ளி, கல்லுாரிகளிலும், தேவாலயங்களிலும் பாடல்கள் பாடி வந்தார்.கடந்த 1967ல், எம்.எஸ்.பாபுராஜ் இசையில் வெளியான உத்யோகஸ்தா மலையாள படத்தில்,'அநுராக கானம் போலே' என்ற பாடலை பாடி திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.மலையாளத்தில் பல பாடல்களை பாடிய அவரை, மணிப்பயல் படம் வாயிலாக தமிழில் அறிமுகப்படுத்தினார், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.இதைத் தொடர்ந்து மூன்று முடிச்சு, கடல் மீன்கள், வைதேகி காத்திருந்தாள், பூவே உனக்காக உட்பட பல்வேறு படங்களில் ஜெயச்சந்திரன் பாடியுள்ளார்.இவர் பாடிய, 'தாலாட்டுதே வானம், ராசாத்தி உன்னை, பூவ எடுத்து ஒரு, கொடியிலே மல்லிகைப்பூ' உள்ளிட்ட பாடல்கள், இசை ரசிகர்கள்மத்தியில் இன்றும்எதிரொலிக்கின்றன.மலையாளம், தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில், 16,000க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார்.ஜி.தேவராஜன், எம்.எஸ்.பாபுராஜ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எம்.எம்.கீரவாணி, வித்யாசாகர் உள்ளிட்ட பல பிரபல இசையமைப்பாளர்களுடன் ஜெயச்சந்திரன் பணியாற்றியுள்ளார்.சிறந்த திரைப்பட பின்னணி பாடகருக்கான தேசிய விருது பெற்ற இவர், தமிழக அரசின் கலைமாமணி விருது, நான்கு முறை தமிழக அரசின் சிறந்த திரைப்பட பின்னணி பாடகர் விருது, ஐந்து முறை கேரள அரசின் சிறந்த திரைப்பட பின்னணி பாடகர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

jagan nathan
ஜன 10, 2025 18:26

"கண்ணுக்கொரு ஒரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீ தானம்மா" குரலுக்கு சொந்தக்காரர். ஆழ்ந்த இரங்கல்கள்.


N.Purushothaman
ஜன 10, 2025 07:54

ஆழ்ந்த இரங்கல்கள் ...ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ...


Mani . V
ஜன 10, 2025 05:23

கடவுள் நமக்கு கொடுத்த கொடை திரு ஜெயச்சந்திரன் அவர்கள். அந்த பொக்கிஷத்தை கடவுள் மீட்டுக் கொண்டு விட்டார். இந்த யுகம் உள்ளவரையிலும் அவரின் குரல் பாடலாக எங்காவது ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் - இடைவெளியே இல்லாமல். அவரின் ஆன்மா எல்லாம் வல்ல இறையின் திருவடிகளில் இளைப்பாறட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை