உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாமந்தி பூக்கள் விலை கடும் வீழ்ச்சி சாலையில் கொட்டிய விவசாயிகள்

சாமந்தி பூக்கள் விலை கடும் வீழ்ச்சி சாலையில் கொட்டிய விவசாயிகள்

பங்கார்பேட்டை: சாமந்தி பூக்களால் லாபம் கிடைக்கும் என்பதால், விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் அதிகளவு பயரிட்டனர். பங்கார்பேட்டை நகரம், தாலுகா பகுதியில் முழுவதுமே சாமந்தி பூக்கள் காணப்பட்டது. நவராத்திரி காலங்களில் இந்த பூக்களின் தேவை அதிகமாக இருந்தது.

நிதி நெருக்கடி

பெரும்பாலான விவசாயிகள், சாமந்தி பூக்களை சாகுபடி செய்துள்ளதால், சந்தைக்கு பூக்கள் அதிகளவில் வருகின்றன. பண்டிகைகள் முடிந்து விட்டதால், தேவையும், விலையும், குறைந்து விட்டது. பூக்களை வாங்க தற்போது ஆளில்லாததால், இதன் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால், விவசாயிகள் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.விவசாயி நேரனஹள்ளி நாராயணப்பா கூறுகையில், ''சாமந்திப்பூ செடி ஒன்றுக்கு, நான்கு ரூபாய் செலவிட்டேன். ஒரு ஏக்கரில், 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்தேன். எதிர்ப்பார்த்தது போல அதிக மகசூல் கிடைத்தது. கடந்த 15 நாட்களாக, சந்தையில், ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் தான் கிடைக்கிறது. 50 கிலோ எடையுள்ள பூக்களை எடுத்துச் சென்றால், மார்க்கெட்டில் ஒரு கிலோவுக்கு பத்து ரூபாய் கமிஷன் கொடுக்க வேண்டும். எனவே, 400 ரூபாய் தான் கையில் கிடைக்கிறது.''தோட்டத்தில் இருந்து பூக்களை, சந்தைக்கு கொண்டுச் செல்ல வாகன செலவு 500 ரூபாய் ஆகிறது. இதனால் விவசாயிகள் சோர்வடைந்துள்ளனர். பூக்களை அறுவடை செய்யாமல் தோட்டத்தில் விடுவதே மேல் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். பூ விளைச்சல் நன்றாக இருந்தும், அதற்கு விலை கட்டுப்படி ஆகாததால், பூக்களை அறுவடை செய்யாமல் உதிர விடுவதே மேல். இக்கட்டான சூழ்நிலையில் விவசாயிகளுக்கு அரசு தான் உதவி செய்ய வேண்டும்,'' என்றார்.பங்கார்பேட்டை தாலுகா விவசாயிகள் சங்க தலைவர்- அப்போஜிராவ் கூறுகையில், ''பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை, வேளாண் துறை உடனடியாக உதவ முன் வரவேண்டும். பூக்கள் பயிரிட்ட விவசாயிகள் முதலீடு செய்த மூல தனத்திற்கும், உழைப்புக்கும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையேல் விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த வேண்டி இருக்கும்,'' என்றார்.

பரிதாபம்

கோலார் மாவட்ட விவசாயிகள் சேனா தலைவர் வெங்கடேசா கூறுகையில், ''சந்தையில் பூக்கள் கிலோவுக்கு 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. பூக்களை பயிரிட மூலதனமும், பூப்பறிக்க வேண்டிய கூலியும், கிடைக்காததால் விவசாயிகள் பரிதாபத்தில் உள்ளனர். எனவே, பூ விவசாயிகள் நலன் கருதி, இழப்பீடு வழங்க வேண்டும்,'' என்றார்.

மேலிடத்துக்கு தகவல்

தசரா, தீபாவளி காலத்தில் சாமந்திப்பூ ஒரு கிலோ 150 ரூபாய் முதல் 200 ரூபாய் விற்பனையானது. தற்போது விலை வீழ்ச்சி அடைந்து, விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். இதுகுறித்து, மேலிட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். -சிவரெட்டி, முதுநிலை உதவி இயக்குனர், தோட்டக்கலைத் துறை, கோலார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 22, 2024 12:32

இந்த பூ வியாபாரிகள் பண்டிகை காலங்களில் விலையை பலமடங்கு ஏற்றி மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். பண்டிகை முடிந்தவுடன் சரியான விலை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை