திருமணத்துக்கு பின் மகள் ஓட்டம்; விரக்தியில் காரியம் செய்த தந்தை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் திருமணம் நடந்த பின், வேறொருவருடன் சென்று திருமணம் செய்த மகளுக்கு, அவருடைய தந்தை இறுதி காரியங்களை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜஸ்தானில் பில்வாரா மாவட்டத்தின் சாரேரி பகுதியைச் சேர்ந்தவர் பாஹிருலால் ஜோஷி. இவர், தன் மகள் பூஜாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் திவாரி என்பவருக்கு கடந்த ஏப்ரலில் திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி பில்வாராவில் உள்ள கல்லுாரியில் எம்.ஏ., தேர்வு எழுதுவதாக தன் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு பூஜா சென்றார். அன்றிரவு நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது மொபைல்போனிற்கு பெற்றோர் தொடர்பு கொண்டனர். எனினும், பூஜா அழைப்பை ஏற்காததால், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் அவரது குடும்பத்தார் தேடினர். எனினும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஜோஷி, தன் மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பூஜா தன் கணவரின் உறவினர் சூரஜ் திவாரியை திருமணம் செய்ததை கண்டறிந்தனர். போலீசாரின் உத்தரவின்படி, பூஜா, கடந்த 4ம் தேதி மாவட்ட எஸ்.பி., முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, தன் முழு விருப்பத்தின்படி சூரஜை திருமணம் செய்ததாக தெரிவித்தார். அத்துடன், தன் குடும்பத்தினரிடம் இருந்து அச்சுறுத்தல் வருவதாகவும் புகார் அளித்தார். இதையடுத்து, பூஜாவை சூரஜுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த பூஜாவின் தந்தை ஜோஷி, தன் மகள் இறந்துவிட்டதாக கூறி, வீட்டின் அருகே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதுடன் இறுதி காரியங்களையும் செய்தார். மேலும் அங்குள்ள வழக்கத்தின்படி விருந்தும் அளித்துள்ளார்.