உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு!: 3 மாஜி முதல்வர்களுடன் எடியூரப்பா மகன் பேரணி

2ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு!: 3 மாஜி முதல்வர்களுடன் எடியூரப்பா மகன் பேரணி

பெங்களூரு: கர்நாடகாவில், இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய, இன்றே கடைசி நாள். மூன்று முன்னாள் முதல்வர்களுடன் எடியூரப்பா மகன் ராகவேந்திரா, ஷிவமொகாவில் நேற்று பிரமாண்டமான பேரணி நடத்தி, வேட்புமனு தாக்கல் செய்தார்.கர்நாடகாவின் 28 தொகுதிகளை இரண்டாக பிரித்து, ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ., இறப்பால் காலியாக உள்ள சுர்பூர் சட்டசபை தொகுதிக்கும், மே 7ல் இடைத்தேர்தல் நடக்கிறது.முதல் கட்டமாக தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் முடிந்து விட்டது. இறுதி களத்தில், 247 வேட்பாளர்கள் உள்ளனர்.* 14 தொகுதிகள்இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும், சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா - தனி, கலபுரகி - தனி, ராய்ச்சூர் - எஸ்.டி., பீதர், கொப்பால், பல்லாரி - எஸ்.டி., ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடா, தாவணகெரே, ஷிவமொகா ஆகிய 14 தொகுதிகளுக்கு, கடந்த 12ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது. தினமும் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள் ஆகும். இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மூத்த மகனும், ஷிவமொகா பா.ஜ., வேட்பாளருமான ராகவேந்திரா, நேற்று பிரமாண்டமான பேரணி நடத்தி, வேட்புமனு தாக்கல் செய்தார்.பேரணியில், முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, குமாரசாமி, மாநில தலைவர் விஜயேந்திரா உட்பட ஏராளமான பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.ராகவேந்திராவுக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடும், முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா, முதல் நாளில் ஏராளமான ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை விட ஐந்து மடங்கு தொண்டர்கள் ராகவேந்திரா மனு தாக்கலில் பங்கேற்றனர்.மத்திய அமைச்சரும், பீதர் பா.ஜ., வேட்பாளருமான பகவந்த் கூபா, இரண்டு நாட்களுக்கு முன் சாதாரணமாக வந்து, பெயரளவுக்கு மனு தாக்கல் செய்தார். நேற்று பீதரின் கணேஷா மைதானத்தில் பிராமண்டமான பொது கூட்டம் நடத்தினார்.* ஓடோடி வந்தவர் அங்கிருந்து, ரோடு ஷோ நடத்தி, தேர்தல் அலுவலகத்துக்கு வந்தார். நேரமானதால் ஓடோடி வந்து, மனு தாக்கல் செய்தார். மதியம் 3:00 மணிக்கு மனு தாக்கல் செய்ய கடைசி நேரம். இவர், 2:50 மணிக்கு வந்து தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.சிக்கோடி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா ஜார்கிஹோளி, அதானி எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி உட்பட அக்கட்சி தலைவர்களுடன் எளிமையாக வந்து மனு தாக்கல் செய்தார். அமைச்சர் மல்லிகார்ஜுன் மனைவியும், தாவணகெரே காங்., வேட்பாளருமான பிரபா, பிரமாண்டமான பேரணி நடத்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.* திங்களேஸ்வரா சுவாமிகள்ஷிரஹட்டி பகீரேஸ்வரா மடத்தின் மடாதிபதி திங்களேஸ்வரா சுவாமிகள், தார்வாட்டில் சுயேச்சை வேட்பாளராக நேற்று மனு தாக்கல் செய்தார். இப்படி, இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளில், நேற்று ஒரே நாளில் 90 பேர் மனு தாக்கல் செய்தனர். நேற்று வரை மொத்தம், 241 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். சட்டசபை இடைத்தேர்தல் நடக்கும் சுர்பூர் தொகுதியில், நேற்று வரை ஏழு பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.இன்று வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள். நாளை மனுக்கள் பரிசீலனை. மனுக்கள் திரும்ப பெறுவதற்கு, 22ம் தேதி கடைசி நாள் ஆகும்....பாக்ஸ்...வேட்பாளர்களின் சொத்து மதிப்பு* ஷிவமொகா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திராவின் சொத்து மதிப்பு 55.83 கோடி ரூபாய். 69.39 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. இரண்டு கார்கள், ஒரு டிராக்டர் உள்ளன. இரண்டு கிரிமினல் வழக்குகள் உள்ளன. குவெம்பு பல்கலைக்கழகத்தில் பி.பி.எம்., படித்துள்ளார்* சிக்கோடி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா ஜார்கிஹோளியின் சொத்து மதிப்பு 9.11 கோடி ரூபாய். 1.57 கோடி ரூபாய் கடன் உள்ளது. சொந்தமாக வாகனங்கள் இல்லை. கிரிமினல் வழக்குகள் இல்லை. விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., படித்துள்ளார்* தார்வாட் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் திங்களேஸ்வரா சுவாமியின், சொத்து மதிப்பு 9.75 கோடி ரூபாய். 39.68 லட்சம் கடன் உள்ளது. ஒரு கார், ஒரு பள்ளி வாகனம், ஒரு டிராக்டர் உள்ளன. மூன்று கிரிமினல் வழக்குகள் உள்ளன* தாவணகெரே தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரபா மல்லிகார்ஜுன் சொத்து மதிப்பு 44.53 கோடி ரூபாய். 97.28 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. சொந்த வாகனங்கள் இல்லை. கிரிமினல் வழக்குகள் கிடையாது. குவெம்பு பல்கலைக்கழகத்தில் பி.டி.எஸ்., படித்துள்ளார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை