புதுடில்லி: குறிப்பிட்ட நேரத்தில் தங்களுடைய சொத்து விபரங்களை தாக்கல் செய்யாத, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பது குறித்து ஆராய வேண்டும் என, மத்திய அரசுக்கு பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறைக்கான பட்ஜெட் மானியக் கோரிக்கை குறித்து, அந்தத் துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு, தன் அறிக்கையை பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ளது. அதில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:ஒவ்வொரு ஆண்டும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தங்களுடைய அசையா சொத்துக்கள் குறித்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும். கடந்த, 2023ல் 73 பேரும், 2024ல், 91 பேரும் இந்த விபரங்களை பதிவு செய்யவில்லை.கடந்த, 2021ல் 14, 2022ல் 12, 2023ல், 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இவ்வாறு பதிவு செய்யாததால், கண்காணிப்புக் குழுவின் பரிந்துரை இல்லாத காரணங்களால், குறிப்பிட்ட பதவிகளில் நியமிக்க முடியவில்லை.குறிப்பிட்ட நேரத்தில் இந்தத் தகவல்களை பதிவு செய்வதற்கு ஏற்ற வகையில், நடைமுறைகளை உருவாக்க வேண்டும். மேலும் பதிவு செய்யாத அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பதை ஆராய வேண்டும்.தற்போது நாடு முழுதும், 1,316 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. இதனால், நிர்வாக நடைமுறைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதில் விரைவான நடவடிக்கைகள் தேவை. இது தொடர்பாக சந்திரமவுலி கமிட்டியின் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.மேலும், மாநிலங்கள், தங்களுக்குத் தேவையான அதிகாரிகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு, தேசிய அளவில் ஒரு சிறப்பு தளத்தை உருவாக்கி, அதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெண்கள் பங்களிப்பு குறைவு!
பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது:பிரதமர் நரேந்திர மோடி, அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு உரிய பங்களிப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். மத்திய அரசின் 'நாரி சக்தி' எனப்படும் பெண் சக்தி கொள்கையை, மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் செயல்படுத்த வேண்டும். இந்த நிறுவனங்களில், பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக நிர்வாக பதவிகளில், பெண்களின் எண்ணிக்கை, 7 சதவீதமாக உள்ளது. அதுபோல, இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவில் பெண்களின் பங்களிப்பு, 7 சதவீதம் மட்டுமே உள்ளது.இந்தத் துறைகளில் பெண்கள் உயர் பதவிகளுக்கு முன்னேறுவதற்கு தடையாக உள்ளவற்றை கண்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண வேண்டும். உயர் பதவிகளில் பெண்களுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.