| ADDED : ஆக 07, 2011 05:26 AM
புவனேஸ்வரம்: ஒடிசாவில் கடந்த ஆண்டு நடந்த ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அம்மாநில முதல்வர் நவீன்பட்நாயக், மற்றம் அவரின் முதன்மை செயலாளர், இரண்டு அமைச்சர்கள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்திலிருந்து மூன்று ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் 17-ம் தேதி நடந்தது. இதில் ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தள கட்சியின் சார்பிலும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு எண்ணிக்கையை வைத்து தான் மாநிலங்களவை (ராஜ்யசபா ) எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுவது விதி. இந்நிலையில் இந்த தேர்தலில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் பேசப்பட்டு விலை போய்விட்டதாக புகார் கூறப்பட்டது. பிரபல சமூக ஆர்வலர் தேபிபிரசாத்புரூஸ்தி என்பவர் புவனேஸ்வர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் முதல்வர் நவீன்பட்நாயக், அவரதுமுதன்மை செயலாளர் பியாரிமோகன்மோகபத்ரா மற்றும் அமைச்சர்கள் இரண்டு பேர் ஆகியோர் ராஜ்யசபா தேர்தலில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரை விலைபேசி, தங்களுக்கு சாதகமாக ஒட்டளிக்க வைத்துள்ளனர் என கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார், முதல்வர் நவீன்பட்நாயக், முதன்மை செயலர் பியாரி மோகன்மோகபத்ரா, மற்றும் இரண்டு அமைச்சர்கள் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மாறிஒட்டளித்த பா.ஜ. எம்.எல்.ஏ, ஒருவரும், காங்.எம்.எல்.ஏ. ஒருவரும் கடந்த ஜூன் மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.