உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயில் கிடங்கில் தீ: ரூ.30 கோடி எண்ணெய் நாசம்

ஆயில் கிடங்கில் தீ: ரூ.30 கோடி எண்ணெய் நாசம்

பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூரில் அடகமாரனஹள்ளி அருகில், 40,000 சதுர அடி பரப்பளவு கொண்ட கிடங்கு உள்ளது. இது, காங்., கட்சியின் முன்னாள் அமைச்சர் ஸ்ரீகண்டையாவின் மருமகன் கிருஷ்ணப்பாவுக்கு சொந்தமானது. இதை, அவர் பிரபல இன்ஜின் ஆயில் தயாரிக்கும், 'ஷெல்' கம்பெனிக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.நேற்று அதிகாலை 3:00 மணியளவில் இந்த கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில், தீ மளமளவென கிடங்கு முழுதும் பரவியது. அருகில் இருந்தவர்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். 12க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.கிடங்கில் இருந்த ஆயில் காரணமாக, தீயின் தாக்கம் அதிகரித்ததே தவிர, கட்டுக்குள் வரவில்லை. அக்கம், பக்கத்து வீடுகளுக்கும் தீ பரவும் அபாயம் இருந்தது. தண்ணீர் பற்றாக்குறையும், தீயை கட்டுப்படுத்த இடையூறாக இருந்தது.தீயணைப்பு படையினர் 12 மணி நேரத்துக்கும் மேல் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலையில் சம்பவம் நடந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில், 30 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள ஆயில் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ