இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி
பெங்களூரு: ''தீபாவளி பண்டிகைக்கு, இரண்டு மணி நேரம் மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும்,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே நிபந்தனை விதித்துள்ளார்.பெங்களூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க மாநில அரசு, நேரம் நிர்ணயித்துள்ளது. இரவு 8:00 முதல் 10:00 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மக்கள் பின்பற்ற வேண்டும்.பட்டாசுகள் வெடிப்பதால், அசம்பாவிதங்கள் நடக்கின்றன. சில இடங்களில் உயிரிழப்பும் நடந்துள்ளது. சிறார்கள் பார்வையை இழந்துள்ளனர். பட்டாசுகளால் சுற்றுச்சூழலும் பாழாகிறது.இருளில் இருந்து, ஒளியை நோக்கிச் செல்லும்போது, சுற்றுச்சூழலை அசுத்தமாக்கக் கூடாது. ரசாயனம் அல்லாத பசுமை பட்டாசுகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். இது குறித்து பட்டாசு விற்போரிடம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.