| ADDED : மார் 19, 2024 10:28 PM
விஜயபுரா : திருமணமான கள்ளக்காதல் ஜோடி கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.விஜயபுரா மாவட்டம், நிடகுந்தி கனி கிராமத்தில் வசித்தவர் சோமலிங்கப்பா, 35. இவரது மனைவி போரம்மா, 32. இந்த தம்பதிக்கு 9 வயதில் மகன் உள்ளார்.இவர்களின் வீட்டின் அருகிலேயே மாவு அரைக்கும் ஆலையை, சோமலிங்கப்பா நடத்தி வந்தார். இதில், அதே கிராமத்தைச் சேர்ந்த பார்வதி, 38, வேலை செய்தார். இவருக்கு லட்சுமண், 19, என்ற மகன் உள்ளார்.சோமலிங்கப்பாவுக்கும், பார்வதிக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டது. பார்வதிக்கு சிறுநீரகத்தில் பிரச்னை இருந்ததால், நேற்று முன் தினம் பாகல்கோட்டில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு சோமலிங்கப்பா அழைத்துச் சென்றார். ஆனால் அதன் பின்னர், அவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்கள் இருவரின் மொபைல் போன்களும் 'சுவிட்ச் ஆப்' ஆகி இருந்தன.நேற்று காலையில், கிராமத்தின் ஒதுக்குப்புறமான இடத்தில், இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இருவரும் கோடாரியால் வெட்டிக் கொல்லப்பட்டது தெரிந்தது. கொலை செய்தது யார்; என்ன காரணம் என்பது தெரியவில்லை.பார்வதியின் மகன் லட்சுமண், மாயமாகி உள்ளார். அவரது மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு உள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் சோமலிங்கப்பா, பார்வதி ஆகிய இருவரையும் லட்சுமண் கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை தேடி வருகின்றனர்.