ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனுக்கு வீட்டுச்சிறை
ராஞ்சி: ஜார்க்கண்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள அரசு மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து பழங்குடியினர் நேற்று போராட்டம் நடத்தினர். இதற்கு ஆதரவு தெரிவித்த பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனை போலீசார் முன்னெச்சரிக்கையாக வீட்டுச்சிறையில் அடைத்தனர். ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி அமைந்துள்ளது. தலைநகர் ராஞ்சியில் உள்ள நக்ரி பகுதியில் 1,074 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'ரிம்ஸ் 2' எனப்படும் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மையம் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மொத்தம், 2,600 படுக்கைகளுடன் கட்டப்பட உள்ள இந்த அரசு 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை, 200 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு நிலம் கையகப்படுத்த பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து 20 பழங்குடியினர் அமைப்புகள், விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் நேற்று நக்ரி பகுதியில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதையொட்டி, போராட்டம் நடந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் போலீசார் கலைத்தனர். போராட்டம் நடந்த இடத்துக்கு ஆதரவாளர்களுடன் சென்ற முன்னாள் முதல்வர் சம்பாய் சோரனின் மகன் பாபுலாலை போலீசார் கைது செய்தனர். மேலும் முன்னாள் முதல்வரும் பா.ஜ., மூத்த தலைவருமான சம்பாய் சோரனை போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர். அவரது வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போராட்டத்தையொட்டி ராஞ்சியின் நக்ரி பகுதியில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.