| ADDED : மார் 30, 2025 04:07 AM
சண்டிகர்: கடந்த 2008ல், பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நிர்மல் யாதவ் மற்றும் நிர்மல்ஜித் கவுர் ஆகியோர் பணியாற்றினர். அப்போது, நீதிபதி நிர்மல்ஜித் கவுர் வீட்டு வாசலில், 15 லட்சம் ரூபாய் ரொக்கம் அடங்கிய பை வைக்கப்பட்டது. இதனால் குழப்பமடைந்த நிர்மல்ஜித், இதுகுறித்து போலீசில் புகாரளித்தார். இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. விசாரணையின் முடிவில், நீதிபதி நிர்மல் யாதவ் வீட்டிற்கு வைக்கப்பட வேண்டிய பணம், தவறுதலாக நிர்மல்ஜித் வீட்டில் வைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. விசாரணையில், ஹரியானா உயர் நீதிமன்ற கூடுதல் அட்வகேட் ஜெனரல் சஞ்சீவ் பன்சாலின் உதவியாளரால் இந்த பணம் வழங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. நிர்மல் என்ற பெயர் குழப்பத்தால், நிர்மல் யாதவின் வீட்டிற்கு பதில், நிர்மல்ஜித் கவுர் வீட்டில் பணம் வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டை நிர்மல் யாதவ் மறுத்தார்.உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நிர்மல் யாதவ் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை, ஹரியானா சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையின்போது, 'நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை, எனக்கு எதிரான முழு விசாரணையிலும் குற்றம்சாட்டக்கூடிய எதுவும் கண்டறியப்படவில்லை' என, நிர்மல் யாதவ் வாதாடினார். பட்டியலிடப்பட்ட 84 சாட்சியங்களில், 69 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 'குற்றஞ்சாட்டப்பட்ட நிர்மல் யாதவ் மீது குற்றத்துக்கான எந்த ஆதாரமும் இல்லாததால், அவர் விடுவிக்கப்படுகிறார்' என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, அந்த வழக்கில் இருந்து நிர்மல் யாதவ் விடுவிக்கப்பட்டார்.