15,000 விநாயகர் பந்தல்களுக்கு ஆந்திராவில் இலவச மின்சாரம்
அமராவதி: ஆந்திராவில் விநாயகர் சதுர்த்திக்காக மாநிலம் முழுதும் அமைக்கப்பட்டுள்ள 15,000 விநாயகர் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்க, மாநில அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திராவின் பல்வேறு இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு, விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பாக வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட மாநில அரசு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து, மாநில எரிசக்தி துறை அமைச்சர் ரவிகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, மாநிலம் முழுதும் அமைக்கப்பட்டுள்ள 15,000 விநாயகர் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். இதற்காக மாநில அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.